பழநி: பழநி முருகன் கோயிலில் மூன்றாவது வின்சை செயல்படுத்த தாமதம் ஆவதால் பக்தர்கள் அவதி படுகின்றனர்.
பழநி முருகன் கோயில் சென்று வர படிப்பாதை, யானை பாதை உள்ளது. மேலும் ரோப் கார், வின்ச் சேவைகள் உள்ளன. மூன்று வின்ச் பாதைகள் உள்ளது. தற்போது இதில் இரண்டு வின்ச்கள் செயல்பாட்டில் உள்ளன. மூன்றாவது வின்ச் பாதையில் கடந்த ஏப்ரல் மாதம் புதிய வின்ச் பெட்டிகள் இணைக்கப்பட்டது. இதற்காக தொழில்நுட்பக் கருவிகள் பொருத்தி படுத்தப்பட்டது. புதிய வின்ச் பெட்டிகளுக்கு தகுந்த பிளாட்பார்ம் அமைக்கப்பட்டுள்ளது.
இப்பணிகள் துரிதமாக நடைபெறாததால் மூன்றாவது வின்ச் இயக்கப்படாமலேயே பல மாதங்கள் உள்ளது. இந்நிலையில் ரோப்கார் வருடாந்தர பராமரிப்பு பணிக்காக தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு நாட்களில் வெளிமாநில, வெளியூர், பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும். அவர்கள் பெரும்பாலும் வின்ச், ரோப்கார் சேவையை பயன்படுத்த விரும்புகின்றனர். இன்று காந்தி ஜெயந்தி விடுமுறையை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் பழநி கோயிலுக்கு அதிக அளவில் வருகை புரிந்தது. இதனால் வின்ச் ஸ்டேஷன் பகுதியில் பக்தர்கள் அதிக நேரம் காத்திருந்தனர். இந்நிலையில் பக்தர்கள் அதிக அளவில் வின்ச் சேவையை மட்டும் நாடி செல்கின்றனர். இரண்டு வின்ச் மட்டும் செயல்படுவதால், பக்தர்கள் கூட்டம் வின்ச் டிக்கெட் வழங்கும் பகுதியில் அதிகரித்துள்ளது. இதனால் பல மணி நேரம் காத்திருக்கும் சூழல் பக்தர்களுக்கு ஏற்படும். இங்கு காத்திருக்கும் வரிசையில் பெண்கள், குழந்தைகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமம் அடைகின்றனர். மேலும் மாற்றுத்திறனாளிகள் முதியவர்கள் அதிக நேரம் காத்திருப்பதால் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே விரைவில் மூன்றாவது வின்ச் பணிகளை கோயில் நிர்வாகம் தீவிரப்படுத்தி விரைவில் பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். மேலும் ரோப் கார் வருடாந்திர பராமரிப்பு பணியை விரைவில் நிறைவு செய்து பக்தர்களின் பயன்பாட்டிற்கு செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இதுகுறித்து விஷ்வ ஹிந்து பரிஷத், திரு மடங்கள் திருக்கோயில்கள் மாநில அமைப்பாளர், செந்தில்குமார் கூறுகையில், "கடந்த எட்டு மாதங்களுக்கு மேலாக மூன்றாவது வின்ச் செயல்பாடு இல்லாமல் உள்ளது. மேலும் இரண்டு வின்ச்களில் முன்னுரிமை வழங்கப்பட்டு சில இருக்கைகள் பயன்படுத்தப்படுகிறது. இதனால் வரிசையில் காத்திருந்து வரும் பக்தர்கள் மலைக்கோயில் செல்ல வெகு நேரம் தாமதமாகிறது. எனவே கோயில் நிர்வாகம் மூன்றாவது வின்சை இயக்க தனி பொறியாளர் குழுவை அமைத்து துரிதமாக பணியை நிறைவு செய்ய வேண்டும். அதிக காலம் தாமதம் ஏற்படும் சூழல் ஏற்பட்டால் மீண்டும் பழைய வின்ச் பெட்டிகளை இணைத்து பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்." என்றார்.