மயிலாடுதுறை: செவ்வாய்க்கிழமை, புரட்டாசி மாத கார்த்திகையை முன்னிட்டு வைத்தீஸ்வரன் கோயில் முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது, தருமபுரம் ஆதீன மடாதிபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயிலில் வைத்தியநாதசுவாமி ஆலயம் புகழ்பெற்ற முருகன் ஸ்தலமாகும் இங்கு முருகன் செல்வமுத்துக்குமாரசாமியாக அருள்பாலிக்கிறார். நவகிரகங்களில் செவ்வாய்க்கு உரிய ஸ்தலமான இந்த ஆலயம் விளங்குகிறது. இன்று புரட்டாசி மாத கார்த்திகை முன்னிட்டு செல்வ முத்துக்குமாரசாமி கார்த்திகை மண்டபத்திற்கு வள்ளி தெய்வானை சமேதராக எழுந்தருளினார் அங்கு அவருக்கு பால் பன்னீர் இளநீர் சந்தனம் உள்ளிட்ட 18 வகையான பொருட்களைக் கொண்டு சிறப்பு மகா அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனை செய்யப்பட்டது. தருமபுர ஆதீன 27-வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இன்று செவ்வாய்க்கிழமையுடன் கிருத்திகை என்பதால் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது.