பதிவு செய்த நாள்
03
அக்
2023
05:10
அவிநாசி: அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் பிப்ரவரி 2ம் தேதி திருக்குட நன்னீராட்டு திருவிழா நடைபெறுகின்றது.
அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள ஹிந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் அறங்காவலர் குழு தலைவர், அறங்காவலர்கள் மற்றும் செயல் அலுவலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்திற்கான தேதி குறித்து வெளியிடுவதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில்,கும்பாபிஷேகம் வருகின்ற 2024ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி காலை 7: 25 மணிக்கு மேல் 9 மணிக்குள் கும்ப லக்கினம் சுவாதி நட்சத்திரத்தில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெறும் என அறிவித்தனர். கொங்கேழு சிவாலயங்களில் முதன்மையான ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகத்திற்கான மராமத்து திருப்பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. இத்திருத்தலத்தில், கும்பாபிஷேகம் நடைபெற்று 14 வருடங்கள் ஆனது. இதனால், கும்பாபிஷேக திருப்பணிகளுக்காக ஆரம்ப கால மராமத்து பணிகளில், அரசமரத்து விநாயகருக்கு முதலில் பாலாலயம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தாமரை குளக்கரையில் அமைந்துள்ள சுந்தரமூர்த்தி நாயனாருக்கு பாலாலயம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக, கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி ஸ்ரீ கருணாம்பிகை அம்மன் சந்ததியின் முன் உள்ள ஐந்து நிலை ராஜகோபுரத்திற்கு கோவை ராமானந்தா அடிகளார் அறக்கட்டளையின் சார்பில் ரூ.11 லட்சத்தில் திருப்பணி செய்வதற்கான பாலாலய பூஜைகள் நடைபெற்று,தொடர்ந்து கோபுரத்திற்கு வர்ணம் தீட்டும் பணிகள் முடிவடைந்தது. முன்னதாக ஜூலை 23ம் தேதி கோவிலில் உள்ள பரிவார சன்னதிகளுக்கும், ஆகஸ்ட் 4ம் தேதி கோவில் நுழைவாயிலில் உள்ள ஏழு நிலை ராஜகோபுரத்திற்கும் பாலாலயம் நடைபெற்றது. தற்போது அம்மன் சன்னதியின் முன் உள்ள ராஜகோபுரம் பணிகள் முழுமை அடைந்துள்ளதால், கோவில் சன்னதியின் நுழைவாயில் உள்ள ஏழு நிலை ராஜகோபுரத்திற்கு வர்ணம் தீட்டும் பணிகளும், சுதைச் சிற்பங்களை மராமத்து செய்யும் பணிகளும் நடைபெற்று வருகிறது. கோவில் உள் மற்றும் வெளிப்பிரகாரம் தரைத்தளங்களில் கல் பதித்தல், திருமாளிகை பத்தி கல் மண்டபம் புதுப்பித்து கட்டுதல், நவகிரகத்திற்கு கல் மண்டபம் கட்டுதல், புதிய நந்தவனம் , கோசாலை விரிவாக்கம் செய்தல், கோவில் தல விருட்சமான பாதிரி மரத்துக்கு சன்னதி மேடை அமைத்து வழிபடும் இடமாக மாற்றி அமைத்தல் மற்றும் கோவில் மூலவர் சன்னதியில் இருந்தும் அம்மன் சன்னதியில் இருந்தும் வெளியேறும் அபிஷேக நீர் உள் பிரகாரத்தில் தங்காமல் கோவில் சுற்றுப்புற வெளி பகுதியில் வெளியேறும்படி அமைத்தல் உள்ளிட்ட பணிகள் விரைவில் துவங்கும் என நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அறங்காவலர் குழு தெரிவித்தனர். இதில் அறங்காவலர் குழு தலைவர் பாப்பீஸ் குழுமம் டாக்டர் சக்திவேல், அறங்காவலர் பொன்னுச்சாமி, கார்த்திகா, ரவிபிரகாஷ், ஆறுமுகம்,கோவில் செயல் அலுவலர் பெரிய மருதுபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.