பதிவு செய்த நாள்
16
அக்
2012
10:10
பெங்களூரு: உலகப் புகழ் பெற்ற மைசூரு தசரா விழா, இன்று, சாமுண்டீஸ்வரி மலையில் துவங்குகிறது. ஐம்பு சவாரி ஊர்வலம், வரும், 24ம் தேதி நடக்கிறது. கர்நாடகாவில், நவராத்திரியை முன்னிட்டு, தசரா விழா, ஒன்பது நாள் கோலாகலமாக நடக்கும். இந்த ஆண்டு விழா, இன்று மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு ஆரம்பமாகிறது. காலை, 10:42 மணியிலிருந்து, 11:12 மணிக்குள் நடக்கும் விழாவை, பிஜாப்பூர் ஞானயோக ஆசிரம மடாதிபதி சித்தேஸ்வர சுவாமிகள் துவக்கி வைக்கிறார். இதைத் தொடர்ந்து, மைசூரு அரண்மனையில், பாரம்பரியமிக்க தங்க சிம்மாசனத்தில் மன்னர் வாரிசு ஸ்ரீகண்ட தத்த உடையார் அமர்ந்து, பொதுமக்களுக்கு காட்சி தருவார். ஒன்பது நாட்களும் மைசூருவில் கலாசார நிகழ்ச்சிகள், குஸ்தி போட்டிகள், கண்காட்சிகள், மலர் கண்காட்சிகள் என, மைசூரு நகர் கோலாகலமாக இருக்கும். இம்மாதம், 24ம் தேதி தங்க அம்பாரியை சுமந்து யானைகள் ஊர்வலம் நடக்கிறது. வழக்கமாக மைசூரு தசரா விழாவுக்கு வெளிநாடுகள், வெளி மாநில மக்கள் என, ஆயிரக்கணக்கானோர் மைசூருவில் முகாமிட்டு நிகழ்ச்சிகளை கண்டுகளிப்பர். இந்த ஆண்டு மைசூரு, மாண்டியா மாவட்டங்களில், காவிரி நதி நீர் பிரச்னையால் போராட்டம் நடந்து வருவதால், சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து காணப்படுகிறது. இதன் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என, தசரா கமிட்டியினர் கூறியுள்ளனர்.