பதிவு செய்த நாள்
07
அக்
2023
11:10
புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் இன்று (7ம் தேதி) சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத சவுரிராஜபெருமாள் அருள்பாலித்தார். உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேசபெருமாள் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மேலைத் திருப்பதி என்று அழைக்கப்படும் மொண்டிபாளையம் வெங்கடேச பெருமாள் கோவிலில் இன்று அதிகாலையில் அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடக்கிறது. காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை பாரம்பரிய கிராமிய கலை நிகழ்ச்சி, பிருந்தாவன கோலாட்டம், வள்ளி கும்மியாட்டம் ஆகியவை நடந்தது. இரவு 7:00 மணிக்கு நடன நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 7:30 மணிக்கு கருட வாகனத்தில், பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக உலா வந்து அருள் பாலிக்கிறார். கோவை, அன்னூர், அவிநாசி, மேட்டுப்பாளையத்தில் இருந்து மொண்டிபாளையம் கோவிலுக்கு இன்று சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பொங்கலூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் இன்று அதிகாலையில் அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடைபெற்றது. மதியம் உட்பிரகாரத்தில் பெருமாள் உலா வருதலும், அன்னதானம் வழங்குதலும் நடக்கிறது. அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவில், பொகலூர் பெருமாள் கோவில், ஓரைக்கால் பாளையம் கோதண்ட ராமர் கோவில், செம்மாணி செட்டி பாளையம் அப்புச்சிமார் கோவில், குன்னத்தூர் நாராயணசாமி கோவில், வரதையம் பாளையம் பெருமாள் கோவிலில் இன்று அதிகாலை முதல் மாலை வரை சிறப்பு வழிபாடு நடக்கிறது.