திருமலை ராயப்பெருமாள் கோயிலில் அதிகாலை தரிசனத்திற்கு ஆயிரக்கணக்கில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07அக் 2023 11:10
உத்தமபாளையம்: கோம்பை மலையடிவாரத்தில் உள்ள திருமலை ராயப்பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாவது வாரத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
உத்தமபாளையம் அருகே உள்ள கோம்பையில் மேற்கு திசையில் ராமக்கல் மெட்டு மலையடிவாரத்தில் உள்ளது திருமலை ராயப்பெருமாள் கோயில். மிகவும் பழமையானதும், பிரசித்திபெற்றதுமாகும். மலையடிவாரத்தில் பசுந்தொழுவத்தில் சுயம்புவாக தோன்றிய ரெங்கநாதர், திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ரெங்கநாதரை போன்று சயன நிலையில் உள்ளார். ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் ஒவ்வொரு சனிக்கிழமையும் பக்தர்கள் திரளாக வருவார்கள். இந்தாண்டு மூன்றாவது சனிக்கிழமையான இன்று அதிகாலை முதல் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரண்டனர். சிறப்பு அலங்காரத்தில் அதிகாலை முதல் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. சுமார் ஒரு கி.மீ. தூரத்திற்கு கடும் வெயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் 2 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். துளசி, துளசி தீர்த்தம் வழங்கப்பட்டது. கோயில் மற்றும் பக்தர்கள் சார்பாக புளியோதரை, பொங்கல், எலுமிச்சை சாதம் பிரசாதமாக வழங்கப்பட்டது. அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கம்பம், சின்னமனூர் | உத்தமபாளையம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.