கூடலுார் கூத்த பெருமாள் கோயிலில் திரண்ட பக்தர்கள்; காத்திருந்து தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07அக் 2023 05:10
கூடலுார்: புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு கூடலுார் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார கூத்த பெருமாள் கோயிலில் பக்தர்கள் திரண்டனர்.
கூடலுார் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது கூத்த பெருமாள் கோயில். புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு சுவாமிக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அபிஷேகம் ஆராதனை சிறப்பு பூஜை நடந்தது. துளசி பிரசாதம் வழங்கப்பட்டது. அன்னதானம் நடந்தது. அதிகாலையில் இருந்து கூடலுார், கம்பம், லோயர்கேம்ப், கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்ப கவுண்டன்பட்டியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வாகனங்களில் வந்தனர். இதனால் கோயில் அமைந்துள்ள பகுதியில் கூட்ட நெரிசல் அதிகம் ஏற்பட்டது. வாகனங்கள் அதிக அளவில் வந்ததால் மந்தை வாய்க்காலில் இருந்து பெருமாள் கோயில் வரையுள்ள 2 கி.மீ., தூர ரோட்டில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நீண்ட நேரம் பக்தர்கள் காத்திருந்து சென்றனர். எஸ்.ஐ., கணேசன் தலைமையில் போலீசார் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தினர். கூடலுார் கூடலழகிய பெருமாள் கோயிலில் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.