பதிவு செய்த நாள்
07
அக்
2023
05:10
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு செல்லும் படிக்கட்டு பாதையில், சிறுத்தை நடமாட்டம் சி.சி.டி.வி., காட்சிகளில் பதிவாகியுள்ளது.
முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலுக்கு, பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அடிவாரத்தில் இருந்து மலை மேல் உள்ள கோவிலுக்கு செல்ல படிக்கட்டு பாதை மற்றும் மலைப்பாதை என இரு வழிகள் உள்ளது. தற்போது மருதமலை கோவிலில், பக்தர்களின் வசதிக்காக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், கடந்த, 5ம் தேதி முதல் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் மலைப்பாதையில் செல்ல தடை விதிக்கப்பட்டு, அமல்படுத்தப்பட்டுள்ளது. அதோடு, மலைப்பாதையில் சாலை புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், வரும், 9ம் தேதி முதல், மலைப்பாதையில் கோவில் பஸ் உட்பட அனைத்து வாகனங்களும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், 4 நாட்களுக்கு முன், மருதமலை படிக்கட்டுப் பாதையில் உள்ள தான்தோன்றி விநாயகர் கோவில் பகுதியில், சிறுத்தை நடமாட்டம் அங்குள்ள சி.சி.டி.வி., கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது படிக்கட்டு பாதையில் மட்டுமே பக்தர்கள் செல்லும் நிலை உள்ளதால், படிக்கட்டு பாதையில், வனத்துறையினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர், வழித்தடங்களில், பணியாளர்களை நிறுத்தி, பாதுகாப்பு பணி மேற்கொள்ள வேண்டும்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில்," மருதமலை வனப்பகுதியில், சிறுத்தை நடமாட்டம் உள்ளது. தற்போது, அடிவாரத்தில் இருந்து மலைக்கு மேல் வாகனங்கள் செல்லாததால், இரவு நேரத்தில், சிறுத்தை படிக்கட்டு பாதையை கடந்து மீண்டும் வனப்பகுதிக்குள் செல்கிறது. தொடர்ந்து, சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வருகிறோம். பொதுமக்களின் பாதுகாப்பிற்காக, மாலை, 5:00 மணிக்கு மேல், படிக்கட்டு பாதையில் செல்ல அனுமதியில்லை. பொதுமக்களும் வனத்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்,"என்றனர்.