முருகனின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடு. சுப்ரமணியசுவாமிக்கு அபிேஷகம் நடக்காமல் வேலுக்கு அபிேஷகம் நடைபெறும் தலம். சத்தியகிரீஸ்வரர் (சிவன்), பவளக்கனிவாய் பெருமாள், கற்பகவிநாயகர், சுப்பிரமணியர், துர்கையம்மன் என பஞ்ச தெய்வங்களும் மூலஸ்தானத்தில் ஒரே குடவரையில் அருளும் கோயில் என பல சிறப்புகளை கொண்டதுதான் மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம். மற்ற ஐந்து தலங்களில் நின்ற கோலத்தில் அருளும் முருகன், இங்கு தெய்வானையை மணம் முடித்த கோலத்தில் இங்கு அமர்ந்தபடி காட்சி தருகிறார். அருகில் நாரதர், இந்திரன், பிரம்மா, நின்றகோலத்தில் வீணையில்லாத சரஸ்வதி, சாவித்திரி ஆகியோரும், இவருக்கு மேலே சூரியன், சந்திரன், கந்தர்வர்களும் உள்ளனர். இங்கு சிவபெருமானே மலைவடிவமாக அருளுவதாலும், கோயில் குடவரையாக இருப்பதாலும் இங்கு சுவாமியைச் சுற்றி பிரகாரம் இல்லை. திருமணம் நடக்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் இங்கு பிரார்த்தனை செய்தால் முருகனே அதை முன்நின்று நிறைவேற்றுவார்.