பதிவு செய்த நாள்
16
அக்
2023
03:10
சென்னை: கொரோனா கட்டுப்பாடு விலக்கப்பட்டு விட்டதால், சிதம்பரம் கோவில் கனகசபையில் இருந்து பக்தர்கள் தரிசனம் செய்ய, எந்த தடையும் இல்லை என, சென்னை உயர் நீதிமன்றத்தில் அறநிலையத்துறை பதில் அளித்துள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோவிலில், கனகசபை மேடையில் இருந்து பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதித்து, 2022 மே மாதம் தமிழக அரசு அனுமதி அளித்தது. இதை எதிர்த்து, ஆலய வழிபடுவோர் சங்கத் தலைவர் டி.ஆர்.ரமேஷ் என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
கட்டுப்படுத்தவில்லை: இதற்கு பதில் அளித்து,அறநிலையத்துறை ஆணையர் கே.வி.முரளிதரன் சார்பில் சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் தாக்கல் செய்த பதில் மனு:
தங்களின் உரிமைகள் மீறப்பட்டதாக பொது தீட்சிதர்கள் குறிப்பிடவில்லை. மனுதாரர், பொது தீட்சிதர் அல்ல. இந்த வழக்கில் எந்த பொது நலனும் இல்லை. சிதம்பரம் நடராஜர் கோவில், பொது கோவில் என்ற வரையறைக்குள் வருகிறது. கோவிலை ஒழுங்குபடுத்தும் உரிமை, அறநிலையத்துறைக்கு இருப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கோவில் மீது அறநிலையத் துறைக்கு உள்ள அதிகார வரம்பை, உச்ச நீதிமன்றம் கட்டுப்படுத்தவில்லை. சிதம்பரம் கோவிலை, பொது தீட்சிதர்கள் தோற்றுவிக்கவில்லை; அவர்கள் பராமரிக்கவும் இல்லை. மன்னர்களால் இந்த கோவில் உருவாக்கப்பட்டது. பக்தர்களின் பங்களிப்பால் பராமரிக்கப்படுகிறது. பொதுவான கோவில் என்பதால், அறநிலையத்துறை சட்டம் இதற்கு பொருந்தும். ஆனால், தங்களின் தனிப்பட்ட சொத்தாக தீட்சிதர்கள் கோருகின்றனர். கொரோனா கட்டுப்பாடுகளுக்கு முன், கனகசபையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். கொரோனா அச்சுறுத்தல் விலகிய பின், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. பொது மக்களும், அரசியல் கட்சிகளும், அமைப்புகளும், பக்தர்களை கனகசபையில் அனுமதிக்கும்படி கோரின. பக்தர்களை அனுமதிப்பது குறித்து, தீட்சிதர்களிடம் கடலுார் உதவி ஆணையர் விசாரணை நடத்தினார். வழக்கறிஞருடன் ஆலோசித்து பதில் அளிப்பதாக கூறினர். இதுவரை பதில் அளிக்கவில்லை. தீட்சிதர்களின் குடும்பத்தினர், அவர்களுக்கு நெருக்கமானவர்களை, கனகசபையில் இருந்து தரிசனம் செய்ய அனுமதிக்கின்றனர். பல ஆண்டுகளாக, கனகசபையில் இருந்து தரிசனம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
அவகாசம்; கொரோனா கட்டுப்பாட்டால் அனுமதி நிறுத்தப்பட்டது. தற்போது கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டதால், பக்தர்களை அனுமதிப்பதில் எந்த தடையும் இல்லை. அரசு உத்தரவை எதிர்த்து, தீட்சிதர்கள் வழக்கு தொடரவில்லை. பொது நலன் கருதி, இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டது. பொது மக்களோ, பக்தர்களோ, இந்த அரசாணையை எதிர்க்கவில்லை. கனகசபையில் இருந்து பக்தர்கள் தொடர்ந்து தரிசனம் செய்கின்றனர். எனவே, இந்த பதில் மனுவை ஏற்று, வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. இதற்கு பதில் அளிக்க, மனுதாரருக்கு அவகாசம் வழங்கி, விசாரணையை டிசம்பர் 12க்கு, முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.