பதிவு செய்த நாள்
18
அக்
2023
04:10
ஓசூர், தேர்ப்பேட்டையில் அசுத்தமான நிலையிலுள்ள கோவில் தெப்பக்குளத்தை, சுத்தம் செய்ய வேண்டிய அறநிலையத்துறை அலட்சியமாக உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மலை மீது மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளம், தேர்ப்பேட்டையில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் தேர்த்திருவிழாவின்போது தெப்பல் உற்சவம் நடக்கும். அப்போது பக்தர்கள் தலைமுடி காணிக்கை அளித்து, இக்குளத்தில் தான் நீராடுவர். புண்ணிய தீர்த்தமாக பக்தர்களால் பார்க்கப்படும் இந்த தெப்பக்குளம், கடந்த சில ஆண்டுகளாக மிக அசுத்தமாக உள்ளது. இதை சுத்தம் செய்ய, ஹிந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. இதை சுத்தம் செய்து கொடுக்கக்கூறி அதிகாரிகள் அணுகினால், பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் தனிநபர்கள் முன்வருவர். ஆனால், அதற்கான முயற்சியை அறநிலையத்துறை எடுக்கவில்லை. மாநகராட்சி நிர்வாகமும் இதை கண்டுகொள்வதாக தெரியவில்லை. அசுத்தமான தெப்பக்குளத்தில், குப்பை அதிகரித்து குளம் மேலும் மோசமாகி, தற்போது தண்ணீர் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால், தெப்பக்குளம் அருகே உள்ள பத்ரகாசி விஸ்வநாதர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அவதிக்கு ஆளாகின்றனர். எனவே, காலம் தாழ்த்தாமல் உடனடியாக தெப்பக்குளத்தை சுத்தம் செய்ய, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.