பதிவு செய்த நாள்
19
அக்
2023
10:10
குடகு: காவிரி ஆறு பிறப்பிடமான தலக்காவிரியில் நேற்று காவிரி தீர்த்த உற்சவம் கோலாகலமாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் புனித நீராடி பரவசம் அடைந்தனர்.
ஆண்டுதோறும் நவராத்திரியின் போது, காவிரி ஆறு பிறப்பிடமான தலக்காவிரியில் காவிரி தீர்த்த உற்சவம் நடப்பது வழக்கம். இந்த வகையில், இந்தாண்டு, நேற்று அதிகாலை 1:26 மணிக்கு பிரம்ம நீரூற்றில் இருந்து, காவிரி பொங்கியது. அந்த நீரை, அர்ச்சகர்கள் குடங்களில் எடுத்து, சுற்றி நின்றிருந்த பக்தர்கள் மீது தெளித்தனர். ஏராளமான பக்தர்கள் பரவசம் அடைந்தனர். இவர்கள், ஒரு நாள் முன்னதாகவே தலக்காவிரிக்கு வந்து, வழிபாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். நேற்று நாள் முழுதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், பாகமண்டலாவில் இருந்து, பாதயாத்திரையாக தலக்காவிரிக்கு வந்த வண்ணம் இருந்தனர். காலை 6:00 மணி முதல், பக்தர்கள் தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. குடவ மக்கள், தங்கள் பாரம்பரிய உடை அணிந்து, பாடல் பாடிக்கொண்டே காவிரி தாயை வணங்கினர். மடிகேரி, குஷால்நகரில் இருந்து சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. முன்னெச்சரிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அரசு சார்பில், சிறிய நீர்ப்பாசன துறை அமைச்சர் போசராஜு, தீர்த்த உற்சவத்தில் பங்கேற்றார். நடிகை ஹர்ஷிகா பூனச்சா, நடிகர் புவன் பொன்னண்ணா தம்பதி, மடிகேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஏ.எஸ்.பொன்னண்ணா உட்பட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.