பதிவு செய்த நாள்
30
அக்
2023
05:10
புதுச்சேரி: மதமாற்றம் என்பது தேச அபாயமாக உருவெடுத்து வரும் நிலையில், ஹிந்து தர்மத்தை பற்றிய விழிப்புணர்வை அனைவரிடமும் ஏற்படுத்த வேண்டிய கட்டாய சூழலில் இருக்கிறோம் என, ஆர்.எஸ்.எஸ்., வட தமிழ்நாடு அமைப்பு செயலர் சரவணன் பேசினார்.
புதுச்சேரி ஆர்.எஸ்.எஸ்., சார்பில், அரியாங்குப்பத்தில் முப்பெரும் விழா சிறப்பு பொதுக்கூட்டம் நடந்தது.விழாவில், வட தமிழ்நாடு அமைப்பு செயலர் சரவணன் பேசியதாவது: ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் தன்னலமற்ற சேவை, 98 ஆண்டுகளாக அமைதியான முறையில் நடந்து வருகிறது. இந்த சங்கம், சுவாமி விவேகானந்தர் கேட்ட, 100 இளைஞர்களை போல, லட்சக்கணக்கான இளைஞர்களை உலகம் முழுதும் உருவாக்கி கொண்டிருக்கிறது. இந்த அமைப்பு, 1925ம் ஆண்டு, செப்., 27ல், நாகபுரியில் மிகச்சிறிய அளவில் துவங்கப்பட்டது. 15 ஆண்டுகளுக்கு பின் இச்சங்கமானது. அனைத்து பகுதியிலும் விஸ்வரூபம் எடுத்தது. இன்றைக்கு, 40 மேற்பட்ட அமைப்புகளுக்கு, தாய் அமைப்பாக ஆர்.எஸ்.எஸ்., உள்ளது. போதை ஒழிப்பு, குடும்ப உறவுகளை பேணும் முறை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பாரத தேசம் பல்வேறு துறைகளில் முன்னேறி வருகிறது. அதற்கு காரணம், நல்ல சிந்தனையாளர்கள் நம் தேசத்தை வழி நடத்திக் கொண்டிருக்கின்றனர். இன்றைக்கு நாடு முழுதும் இங்கிருக்கும் ஹிந்துக்களை குறி வைத்து, மத மாற்றம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த மதமாற்றம் மிகப்பெரிய தேசிய அபாயம். அதனால், ஹிந்து தர்மத்தை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய கட்டாய சூழலில் நாம் இருக்கிறோம். சமூகத்தில் உள்ள அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணக்கூடிய அமைப்பாக ஆர்.எஸ்.எஸ்., உள்ளது. ராமஜென்ம பூமி கும்பாபிஷேக நிகழ்ச்சி, வரும் ஜனவரி 22ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஹிந்துக்கள் வலிமையானவர்களாக மாற வேண்டும். உலகின் குருவாக பாரதம் மாறக்கூடிய முயற்சியை நாம் அனைவரும் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.