திட்டக்குடி; திட்டக்குடி அடுத்த வாகையூர் கிராமத்தில் மழை வேண்டி, கிராமப்பெண்கள் ஒப்பாரி வைத்து வினோத வழிபாட்டில் ஈடுபட்டனர்.
கடலுார் மாவட்டம், திட்டக்குடி மற்றும் அதைச்சுற்றியுள்ள கிராமங்களில் போதிய மழை இல்லாமல் விளைநிலங்களில் பயிரிட்டுள்ள நெல், சோளம் உள்ளிட்ட பயிர்கள் பாழாய்ப்போனது. இதனால் திட்டக்குடி அடுத்த வாகையூர் கிராமத்தில், மழை வேண்டி பழங்கால முறைப்பட்டி சப்தகன்னி வழிபாடு நடந்தது. நேற்று முன்தினம் இரவு கிராமப்பெண்கள் வீடு, வீடாகச்சென்று பழைய சோறை சேகரித்து, கிராமத்தின் மையப்பகுதியில் உள்ள சந்தி என்றழைக்கப்படும் தெய்வத்திற்கு விளக்கேற்றி, பூமாலை அணிவித்து சோற்றை படையலிட்டு வழிபட்டனர். பின் பெண்கள் மழை வேண்டி ஒப்பாரி வைத்து வழிபட்டனர். பழங்காலத்தில் நம் முன்னோர்கள் இதுபோன்ற வழிபாட்டைச்செய்வது வழக்கம் என மக்கள் தெரிவித்தனர். இந்த வழிபாட்டைத் தொடர்ந்து நேற்று அதிகாலை முதல் திட்டக்குடி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.