மயிலாடுதுறை; திருப்பனந்தாள் காசி மடத்தில் குளத்தின் சுற்றுச் சுவரை இடித்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுத்து சமுதாய நல்லிணக்கத்தை நிலைநாட்ட தமிழக முதல்வருக்கு தருமபுரம் ஆதீனம் 27-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீஹஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முகநூல் வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாளில் உள்ள பழமை வாய்ந்த திருப்பனந்தாள் காசி மடத்தில் குளத்தின் சுற்றுச்சுவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மர்ம நபர்களால் இடிக்கப்பட்டது. தருமபுரம் ஆதீனத்தின் சீடர் மடமாக திருப்பனந்தாள் மடம் உள்ளது. இதுகுறித்து மடத்தின் சார்பில் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருப்பனந்தாள் மடத்துக்கு தருமபுரம் ஆதீனம் ஆதரவு குரல் எழுப்பி உள்ளார். இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கூறியதாவது: தமிழக முதல்வர் கவனத்திற்கு.. நம் ஆதீன திருக்கோவில் அமைந்த இடத்தையொட்டி நம் ஆதீன சீடர்மடமாக திகழும் திருப்பனந்தாள் காசிமடத்தின் குளத்து மதில்சுவரை இரவு நேரத்தில் உடைத்து சேதபடுத்தியுள்ளனர். இது அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக யாராக இருந்தாலும் அவர்களுக்குரிய தண்டனையை கொடுக்கனும். இதற்கு தக்கவகையில் தீர்வுகண்டு நீதியையும் அமைதியையும் சமுதாய நல்லிணக்கத்தையும் நிலைநிறுத்த விரும்புகிறோம் என அதில் குறிப்பிட்டுள்ளார்.