கோயில் கலசத்தை திருட முயன்று முடியாததால் உடைத்து சென்ற மர்ம நபர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05நவ 2023 07:11
காரியாபட்டி: கோயில் கலசத்தை திருட முயன்று முடியாததால், ஆத்திரத்தில் சிலைகளை சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை காரியாபட்டி போலீசார் தேடி வருகின்றனர்.
காரியாபட்டி கே.கரிசல்குளத்தில் அய்யனார், கருப்பசாமி கோயில் உள்ளது. வைகாசி மாதம் திருவிழா நடைபெறும். விசேஷ நாட்களில் மதுரை, திருப்பூர், கோவை உள்ளிட்ட ஊர்களில் இருந்து பக்தர்கள் சாமி கும்பிட்டு செல்வர். திறந்த வெளியில் சிலைகள் இருந்தன. இதையடுத்து சில ஆண்டுகளுக்கு முன் அய்யனாருக்கு கட்டடம் கட்டி கோபுரம் எழுப்பப்பட்டு, கலசம் வைத்தனர். 2 ஆண்டுகளுக்கு முன் கலசம் திருடு போனது. கண்டுபிடிக்க முடியவில்லை. மறுபடியும் கோபுரத்தில் கலசம் வைக்க ஏற்பாடு செய்தனர். திருடு போகாமல் இருக்க கான்கிரீட்டில் இரும்பு பைப் பொருத்தப்பட்டு எளிதில் திருட முடியாத அளவிற்கு வலுப்படுத்தினர். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு மர்ம நபர்கள் கோபுரத்தில் இருந்த கலசத்தை திருட முயன்றனர். முயற்சி வீணானதால் ஆத்திரத்தில் அங்கிருந்த சிலைகளை அடித்து நொறுக்கினர். கதவு, உண்டியல் சேதப்படுத்தப்பட்டது. கிராமத்தினர் காரியாபட்டி போலீசார் தகவல் தெரிவித்தனர். தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.