பதிவு செய்த நாள்
08
நவ
2023
05:11
பழநி: பழநி, சிவகிரிபட்டியில் இடும்பன் கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
பழநியில் சிவகிரி பட்டி ஊராட்சியில் ஹிந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடும்பன் கோயில் சிவகிரிபட்டி பைபாஸ் சாலை அருகே உள்ளது. இக்கோயிலில் விநாயகர், இடும்பன், கடம்பன், முருகன், சிவகிரிநாதன், உமாமகேஸ்வரி, மகாலட்சுமி, நவகிரக சன்னதிகள் உள்ளன. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நவ.6ல் காலை புனித நீர் வழிபாடு நடைபெற்று சுவாமி அனுமதி பெறுதல், முதல் கால வேள்வி துவங்கி நடைபெற்றது. நவ.7ல் மூலவர், பரிவார தெய்வங்களுக்கு மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடைபெற்று, இரண்டாம் கால வேள்வி நடைபெற்றது. அதன் பின் மூன்றாவது கால வேள்வி நடைபெற்றது. இன்று நவ.8ல் காலை நான்காம் கால வேள்வி நடைபெற்றது. தொடர்ந்து, திருச்சுற்று வழிபாடு, பரிவார தெய்வங்களுக்கு திருகுட நன்னீராட்டு காலை 9:02 மணிக்கு அனைத்து சன்னதிகளின் கோபுர கலசங்களுக்கும் ஒரே நேரத்தில் நடைபெற்றது. சன்னதியில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு, தீபாதாரணை, அலங்காரம் நடைபெற்றது. சிறப்பு அன்னதான நிகழ்ச்சி நடந்தது. திண்டுக்கல் மாவட்ட ஹிந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் பாரதி, கோயில் செயல் அலுவலர் ராமநாதன், பரம்பரை அறங்காவலர் ராஜா, கந்த விலாஸ் கடை உரிமையாளர் பாஸ்கரன், தனலட்சுமி, நிகால் விஷ்ணு உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.