பதிவு செய்த நாள்
11
நவ
2023
08:11
மேட்டுப்பாளையம்: குருந்தமலை குழந்தை வேலாயுதசுவாமி கோவிலில், புதிதாக செய்த தேர் வெள்ளோட்டம், வருகிற, 23ம் தேதி நடைபெற உள்ளது.
காரமடை அருகே குருந்தமலையில், மிகவும் பிரசித்தி பெற்ற, பழமையான குழந்தை வேலாயுத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் சிறிய, பெரிய தேர் என இரண்டு தேர்கள் உள்ளன. அதில் பெரிய தேர், தேரோட்டத்திற்கு உபயோகப்படுத்த முடியாத நிலையில் உள்ளது என, ஹிந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்தது. அதனால் புதிதாக தேர் செய்ய நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. கோவையை சேர்ந்த சுகுணா பம்ப் மோட்டார் நிறுவனத்தினர், புதிய தேர் முழுவதுமாக செய்து கொடுக்க முன்வந்தனர். இதற்கு ஹிந்து சமய அறநிலைத்துறை நிர்வாகத்தினர், ஒப்புதல் அளித்தனர். கடந்த நான்கு மாதங்களுக்கு முன், தேர் செய்யும் பணிகள் துவங்கின.
தேர் செய்வதற்கு இலுப்பை, தேக்கு ஆகிய இரண்டு வகை சேர்ந்த,16 டன் மரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பதினொன்னே முக்கால் அடி உயரம், பன்னிரண்டேகால் அடி அகலத்தில் தேர் செய்யப்பட்டுள்ளது. இதில் மொத்தமாக, 148 சிற்ப சிலைகள் மரத்தில் செதுக்கப்பட்டுள்ளன. மூன்று நிலை தேரில், கோவில் தல வரலாறு, சிவபுராணம், கந்தபுராணம், விஷ்ணு புராணம் ஆகிய சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன. இந்த தேரின் மொத்த எடை, 16 டன் கணக்கிடப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், தம்மம்பட்டியை சேர்ந்த ஸ்தபதி பொன் ரவி, 16 சிற்ப வேலை ஆட்களை வைத்து, இந்த தேரை நான்கு மாதங்களில் முழுமையாக செய்து முடித்துள்ளார். தேர் வெள்ளோட்டம் குறித்து ஆலோசனைக் கூட்டம், குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோவிலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கோயில் செயல் அலுவலர் லோகநாதன் தலைமை வகித்தார். தேர் நன்கொடையாளர் லட்சுமி நாராயணன் மற்றும் புங்கம்பாளையம், கிட்டாம்பாளையம், காளியப்பனுர், அரசப்பனூர், தேக்கம்பட்டி ஆகிய ஐந்து கிராமங்களைச் சேர்ந்த, மிராசுதாரர்கள், பொதுமக்கள் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் வருகிற, 23ம் தேதி புதிய தேர் வெள்ளோட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதற்கான அனைத்து வேலைகளையும், துரிதமாக செய்து முடிக்கவும், கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. கோவில் அர்ச்சகர் மணிகண்டன் குருக்கள் நன்றி கூறினார்.