பதிவு செய்த நாள்
20
நவ
2023
04:11
பல்லடம்: பல்லடம் அருகே, கோபாஷ்டமி தினத்தை முன்னிட்டு கோ பூஜை வழிபாடு நடந்தது.
திருப்பூர் மண்டல கோ சேவா சமிதி சார்பில், கோபாஷ்டமி தினத்தை முன்னிட்டு, கோ பூஜை வழிபாடு, பல்லடம் அடுத்த அம்மாபாளையம் கிராமத்தில் நடந்தது. முன்னதாக, நாட்டுப் பசு மாடுகள், காளை உள்ளிட்டவை குளிக்க வைக்கப்பட்டு, கொம்புகளுக்கு எண்ணெய் தடவி, மஞ்சள் குங்குமம் பூசி, மாலை அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சாணத்தால் விநாயகர் செய்யப்பட்டு, தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, பூ, ஊதுபத்தி சாம்பிராணி வைத்து விநாயகருக்கு வழிபாடு நடந்தது. இதையடுத்து, பசுக்களுக்கு தூபம் காட்டி, மலர்கள் தூவி, 108 அர்ச்சனை வழிபாடு நடந்தது. தொடர்ந்து, அனைவரும் பசுக்களுக்கு பழம் மற்றும் அகத்திக்கீரைகளை வழங்கி வழிபட்டனர்.
இது குறித்து கோ சேவா சமிதி நிர்வாகிகள் கூறுகையில், கிருஷ்ணர் குழந்தையாக இருக்கும்போது, பலராமனுடன் சேர்ந்து முதன் முதலில் பசுக்களை மேய்ச்சலுக்கு அனுப்பிய நிகழ்வை விழாவாக கொண்டாடி மகிழ்ந்தார்கள். அந்நாள், கோபாஷ்டமி என கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும், கார்த்திகை மாதம் அஷ்டமி தினத்தில் இந்நாள் வருகிறது. இதை முன்னிட்டு, பசுக்களுக்கு பூஜை செய்து வழிபட்டால், பாவங்கள், சாபங்கள் நீங்கி, வாழ்க்கை வளம் வரும் என்பது ஐதீகம். அதன்படி, கோபாஷ்டமி தினத்தில் கோ பூஜை செய்யப்பட்டு வருகிறது என்றனர்.