பதிவு செய்த நாள்
25
நவ
2023
11:11
பழநி: பழநி கோயிலில் திருக்கார்த்திகை விழாவில் மகா தீபம், சொக்கப்பானை ஏற்றப்படும்.
பழநி கோயிலில் திருக்கார்த்திகை விழா நவ.20 சாயரட்சை பூஜையில் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் சாயரட்சை பூஜைக்கு பின் சண்முகார்ச்சனை, தீபாராதனை, தங்க சப்பரத்தில் எழுந்தருளல், சின்னகுமார சுவாமி புறப்பாடு, யாகசாலை தீபாராதனை, தங்கரத புறப்பாடு, என தினமும் நடைபெற்றது. (நவ.25.,) இன்று சாயரட்சை பூஜைக்கு பின் யாகசாலையில் இருந்து தீபம் எடுத்து வந்து பரணி தீபம் சன்னதியில் ஏற்றப்பட்டது. சின்ன குமாரசுவாமி தங்கச் சப்பரத்தில் எழுந்தருளல், தங்க ரத புறப்பாடு நடைபெற்றது.
திருக்கார்த்திகை தினமான நாளை அதிகாலை 4:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம், மதியம் சண்முகார்ச்சனை, சண்முகர் தீபாராதனை, மாலை 4:00 மணிக்கு சாயரட்சை பூஜையும், சின்ன குமாரசுவாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி யாகசாலை, பிரகாரம் வலம் வருவார். அதன்பின் தீபமேற்றும் மண்டபத்திற்கு எழுந்தருள்வார். பிரகாரங்களில் தீபம் வைத்தல் நடைபெறும். மாலை 6:15மணிக்கு தீப ஸ்தம்பத்தில் மகாதீபம் ஏற்றும் நிகழ்வு நடைபெறும். அக்னி லிங்க தரிசனமும், சொக்கப்பனையும் ஏற்றுதலும் நடைபெறும். இதை தொடர்ந்து திருஆவினன்குடி கோயில், பெரியநாயகியம்மன் மகா தீபம் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்வுகள் நடைபெறும். கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்வை முன்னிட்டு நாளை மட்டும் தங்க ரதத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறாது. மலைக்கோயிலை தொடர்ந்து திருஆவினன்குடி கோயில், பெரியநாயகியம்மன் மகாதீபம், சொக்கப்பனை ஏற்றும் நிகழ்வுகள் நடைபெறும்.