பதிவு செய்த நாள்
28
நவ
2023
08:11
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சிவபுரத்தில் உள்ள சிவகுருநாத சுவாமி கோவில் இருந்த 11ம் நுாற்றாண்டை சேர்ந்த ஐம்பொன் நடராஜர் சிலை, 1956ல் காணாமல் போனது. நாச்சியார்கோவில் போலீசில் 1969ல் புகார் செய்யப்பட்டது.
சர்வதேச போலீசார் உதவியுடன், அமெரிக்கா நாட்டின், நியூஜெர்ஸி மாகாண மியூசியத்தில் அந்த சிலை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, பல்வேறு சட்ட நடவடிக்கைகளுக்கு பின், 1988ல், நடராஜர் சிலை இந்தியா எடுத்து வரப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்படி, திருவாரூர் உலோக திருமேனிகள் பாதுகாப்பு மையத்தில் அந்த சிலை வைக்கப்பட்டிருந்தது. சிலையை வழிபாட்டுக்கு எடுத்து வர அனுமதி கேட்டு, சிவபுரம் கிராம மக்கள், கோவில் நிர்வாகம் சார்பில், கும்பகோணம் கூடுதல் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவை நேற்று விசாரித்த நீதிபதி சிவசக்திகண்ணன், திருவாரூர் உலோக திருமேனிகள் பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ள, சிவபுரம் சிவகுருநாத சுவாமி கோவில் ஐம்பொன் நடராஜர், விநாயகர் சிலைகளை கோவிலில் சிறப்பு வழிபாட்டுக்கு வைக்க உத்தரவிட்டார். கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணகுமார், சிவபுரம் கிராம மக்கள் மற்றும் பக்தர்கள் திரண்டு, 66 ஆண்டுகளுக்கு பின், நடராஜர் சிலையை ஊர்வலமாக எடுத்துச் சென்று, கோவிலில் வைத்து, பூஜை செய்து வழிபட்டனர்.