சபரிமலையில் இனி.. மாத பூஜை காலத்திலும் மண்டல மகர விளக்கு காலம் போல முழு சீசன் ஏற்பாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02டிச 2023 02:12
சபரிமலை; இனி வரும் மாத பூஜை நாட்களிலும் மண்டல மகர விளக்கு காலம் போல ஏற்பாடுகள் செய்வது பற்றி திருவிதாங்கூர் தேவசம்போர்டு தீவிர பரிசீலனை நடத்தி வருகிறது.
மண்டல மகர விளக்கு காலத்தில் 62 நாட்கள் தொடர்ச்சியாக நடை திறந்திருக்கும். இதை தவிர்த்தால் எல்லா தமிழ் மாதங்களிலும் கடைசி நாளில் நடை திறந்து அதன் அடுத்த மாதத்தில் முதல் ஐந்து நாட்கள் பூஜைகள் நடைபெறும். மண்டல மகர விளக்கு காலத்தில் பக்தர்களின் பாதுகாப்புக்காக பல்லாயிரக்கணக்கான போலீசாரும் ஆயிரக்கணக்கான தேவசம்போர்டு ஊழியர்களும் நியமிக்கப்படுகின்றனர். மாத பூஜை நாட்களில் இவ்வாறு நியமனம் செய்யப்படுவதில்லை. குறைந்த எண்ணிக்கையில் போலீசார் வருகின்றனர். தேவசம் போர்டு ஊழியர்களும் குறைவாகவே நியமிக்கப்படுகின்றனர். மாத பூஜை காலத்தில் சன்னிதானம் காவல் நிலையம் செயல்படாது.
கடந்த ஜூன் மாதத்திற்கு பின்னர் மாத பூஜை காலத்தில் தினமும் 50 ஆயிரம் பக்தர்கள் வருகை தந்தனர். இதனால் போதுமான வசதிகள் கிடைக்காமல் பக்தர்கள் சிரமப்பட்டனர். இதை கருத்தில் கொண்டு நடப்பு மண்டல -மகர விளக்கு காலத்துக்கு பின்னர் வரும் மாத பூஜை நாட்களில் மண்டல சீசன் போன்ற ஏற்பாடுகள் செய்வது பற்றி திருவிதாங்கூர் தேவசம்போர்டு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. அப்படிப்பட்ட வசதிகள் செய்வதற்கு அரசு கொள்கை அளவில் முடிவு எடுக்க வேண்டும் என்பதால் இது தொடர்பாக முழு அறிக்கை தயாரித்து அரசுக்கு சமர்ப்பிக்க தேவசம்போர்டு திட்டமிட்டுள்ளது. மாத பூஜை காலத்தில் போலீசாரின் குறைவான எண்ணிக்கை மிகப் பெரிய சவாலாக உள்ளது. சபரிமலையில் தீயணைப்புத் துறையின் சேவை நிரந்தரமாக வேண்டும் என்றும் இதற்காக அரசுக்கு பரிந்துரை அனுப்பப்படும் என்றும் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. இதை அரசு ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் மாத பூஜையும் மண்டல மகர விளக்கு சீசன் போல் நடைபெறும்.