பைரவர் ஜெயந்தி; பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் சிவனின் அம்சமான அஷ்ட பைரவர்களுக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05டிச 2023 03:12
மயிலாடுதுறை; பைரவர் ஜெயந்தி திருநாளான கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவர் கோவில்களில் நடைபெற்ற சிறப்பு யாகம் மற்றும் அபிஷேக ஆராதனைகளில் திரளான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
சிவனின் அம்சமாக கருதப்படும் பைரவர் கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி தினத்தன்று தோன்றியதாக புராணம் கூறுகின்றது. சனியின் குருவாக போற்றப்படும் பைரவரை துதித்தால் ஏழரை சனி, அஷ்டம சனி ஆகிய பாதிப்புகளில் இருந்து நிவாரணம் பெறலாம் என ஜோதிடம் கூறுகின்றது. இன்று கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமியான பைரவாஷ்டமியை முன்னிட்டு காசிக்கு இணையான பைரவ சேத்திரமாக போற்றப்படும் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான திருநிலை நாயகி அம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள அஷ்ட பைரவர்கள் சன்னதியில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டு பூர்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனை செய்யப்பட்டது. தொடர்ந்து கடங்களில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் கொண்டு அஷ்ட பைரவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை செய்யப்பட்டது. இதுபோல் சீர்காழி மணிக்கூண்டு அருகே தனியே கோவில் கொண்டுள்ள சொர்ணாகர்ஷன பைரவருக்கு சிறப்பு யாகம் மற்றும் அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பூஜைக்கான ஏற்பாடுகளை வர்த்தக சங்கத் தலைவர் எஸ்.கே.ஆர்.சிவசுப்பிரமணியன் குடும்பத்தினர் செய்திருந்தனர். திரளான பக்தர்கள் பங்கேற்ற சுவாமி தரிசனம் செய்தனர். இதுபோல குத்தாலம் அருகே சேத்திரபாலபுரம் ஆனந்த காலபைரவர் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பக்தர்கள் இதில் பங்கேற்று தேங்காய், பாகற்காய், பூசணிக்காய் உள்ளிட்ட பல்வேறு தீபங்களை ஏற்றி வழிபாடு செய்தனர்.