ஆச்சாள்புரம் கோவில் திருப்பணி; தருமபுரம் ஆதீனம் தொடங்கி வைத்தார்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10டிச 2023 06:12
மயிலாடுதுறை; ஆச்சாள்புரம் சிவலோக தியாகராஜ சுவாமி கோவில் திருப்பணிகளை தருமபுரம் ஆதீன குருமகா சன்னிதானம் தொடங்கி வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா ஆச்சாள்புரம் கிராமத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான திருவெண்ணீற்று உமையம்மை சமேத சிவலோக தியாகராஜ சுவாமி கோவில் அமைந்துள்ளது. மிகவும் பழமையான தேவாரப் பாடல் பெற்ற இக்கோவில் திருஞானசம்பந்தருக்கு திருக்கல்யாணம் நடந்த தலமாகவும், முக்தி அடைந்த தலமாகவும் விளங்கி வருகிறது. மேலும் இக்கோவில் ரிண விமோச்சனர் பரிகார ஸ்தலமாகவும் திகழ்கிறது. இக்கோவிலில் சோமவாரமான திங்கட்கிழமை அன்று சுவாமி, அம்பாளை தரிசித்தால் திருமணம், குழந்தை மற்றும் வீடு மனை வாங்கும் பாக்கியங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். இக்கோவிலுக்கு கடந்த 2010ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. 12 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இன்று கோவில் திருப்பணிகளை தருமபுரம் ஆதீனம் 27 வது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தொடங்கி வைத்தார். திருப்பணி தொடக்க விழாவை முன்னிட்டு கோவில் மண்டபத்தில் சிறப்பு யாகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு மங்கள வாத்தியம் இசைக்க, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத பாலாலைய அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து கோவில் ராஜகோபுரத்தின் வலதுபுற மூலையில் பூஜிக்கப்பட்ட கல்லை குரு மகா சன்னிதானம் வைத்து முகூர்த்தம் செய்து திருப்பணிகை தொடங்கி வைத்தார். இதனை அடுத்து ராஜகோபுரத்தின் அருகே முகூர்த்த காலினையும் குரு மகா சன்னிதானம் நட்டு தீபாராதனை செய்து வைத்தார். திருப்பணி தொடக்க விழாவில் தருமபுரம் ஆதீன பொது மேலாளர் ரங்கராஜன், ஆதீன கோவில்களின் தலைமை கண்காணிப்பாளர் மணி, டாக்டர் முருகேசன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.