பதிவு செய்த நாள்
30
டிச
2023
11:12
புதுடில்லி: ஜன.,22ல் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடக்கும் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வை உலக நாடுகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றன என பிரதமர் மோடி பேசினார்.
அயோத்தி சென்ற பிரதமர் மோடி, அங்கு புதிதாக கட்டப்பட்ட விமான நிலையத்தை திறந்து வைத்தார். பிறகு, சுமார் 15 ஆயிரம் மதிப்புமிக்க மக்கள் நலத்திட்டங்களையும் துவக்கினார்.
பிறகு மோடி பேசியதாவது: உலகில் எந்த நாடாக இருந்தாலும், வளர்ச்சியில் புதிய உச்சத்தை எட்ட வேண்டும் என்றால், அது தனது பாரம்பரியத்தை கவனிக்க வேண்டும். வளர்ச்சியும், பாரம்பரியமும் இந்தியாவை முன்னெடுத்து செல்லும். நாட்டின் வரலாற்றில் டிச.,30ம் தேதி முக்கியத்துவம் வாய்ந்தது.1943 ம் ஆண்டு இதே நாளில் தான் அந்தமான் தீவுகளில் இந்திய தேசியக் கொடியை ஏற்றிய நேதாஜி, சுதந்திரத்தை பிரகடனம் செய்தார். இன்றைய இந்தியா, தனது புண்ணியத் தலங்களை அழகுபடுத்துவதுடன், டிஜிட்டல்தொழில்நுட்பம் நிறைந்த நாடாக உள்ளது. ஜன.,22ல் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடக்கும் வரலாற்று நிகழ்வை உலக நாடுகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றன. இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ள வந்தே பாரத், அம்ரீத் பாரத் ரயில்கள் மூலம் ரயில்வேத்துறை வளர்ச்சி பெறும்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட துவங்கியதும், ஏராளமானோர், இந்நகரை நோக்கி வர துவங்கினர். இதனை மனதில் கொண்டு, வளர்ச்சி பணிகளை துவக்கினோம். இன்று அயோத்தி விமான நிலையம்,ரயில் நிலையத்தை திறந்து வைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. விமான நிலையத்திற்கு மஹரிஷி வால்மீகி பெயர் சூட்டியது மகிழ்ச்சி அளிக்கிறது. கடவுள் ராமரின் பணிகளை, ராமாயணம் மூலம் நமக்கு அறிமுகப்படுத்தியவர் தான் வால்மீகி. நாட்டிற்காக புதிய தீர்மானம் எடுத்து, புதிய ஆற்றலை நமக்குள் நிறைவேற்ற வேண்டும். இதற்காக 140 கோடி பேரும், தங்களது வீடுகளில் ஜன.,22 அன்று ராமஜோதி ஏற்றி அன்றைய தினம் தீபாவளி கொண்டாட வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
பயணிகள் உற்சாகம்; அயோத்தி விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்ததும், டில்லியில் இருந்து வந்த விமானம் முதலாவதாக தரையிறங்கியது. விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகள் அனைவரும், ‛ஸ்ரீராம்... ஸ்ரீராம்... என உற்சாகமாக கோஷம் போட்டனர். இந்த விமான நிலையத்தை கட்டிக் கொடுத்ததற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தனர்.