பதிவு செய்த நாள்
22
அக்
2012
09:10
சபரிமலை: ஐப்பசி மாத பூஜைகள் முடிந்து, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை அடைக்கப்பட்டது. மண்டல உற்சவத்திற்காக, கோவில் நடை அடுத்த மாதம், 15ம் தேதி திறக்கப்படும். சபரிமலை அய்யப்பன் கோவில் நடை, மாத பூஜைகளுக்காக ஒவ்வொரு மாதமும் திறக்கப்படுவது வழக்கம். அதேபோல், ஐப்பசி மாத பூஜைகளுக்காக, இம்மாதம், 16ம் தேதி திறக்கப்பட்டது. மாத மற்றும் சிறப்பு பூஜைகள் முடிந்து, நேற்று இரவு, 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. அய்யப்பன் கோவிலில், இந்தாண்டுக்கான மண்டல பூஜை, அடுத்த மாதம், 16ம் தேதி துவங்குகிறது. தற்காக, கோவில் நடை, அடுத்த மாதம், 15ம் தேதி, மாலை, 5:30 மணிக்கு திறக்கப்படும். அன்று வேறு பூஜைகள் ஏதுமிருக்காது. மறுநாள், 16ம்தேதி காலை, கணபதி ஹோமத்துடன் மண்டல பூஜைகள் துவங்கும். மண்டல உற்சவம் வரும் டிசம்பர், 26ம் தேதி நடைபெறும். மண்டல உற்சவம் முடிந்து, அன்றிரவு நடை அடைக்கப்படும். சபரிமலையில், சாமி தரிசனத்திற்காக, பல மணி நேரம் நீண்ட வரிசையில், பக்தர்கள் காத்திருப்பதை தவிர்ப்பதற்காக, கேரள காவல் துறை சார்பில்,முன் பதிவு செய்ய வசதியாக, வலை தளம் (www.sabarimalaq.com)துவக்கப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி, பக்தர்கள் சிரமமின்றி, வரிசையில் காத்திருக்காமல், விரைவாக சுவாமி தரிசனம் செய்யலாம். இந்த ஆண்டுக்கானஆன் - லைன் முன்பதிவு துவங்கியுள்ளது.