பதிவு செய்த நாள்
31
டிச
2023
12:12
பூரட்டாதி; நெருக்கடி அதிகரிக்கும்
குரு பகவான்
நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்தாலும், முதல் 3 பாதங்களில் பிறந்தவர்களுக்கு
சனி பகவான் ராசிநாதனாகவும், 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு உங்கள்
நட்சத்திரநாதனே ராசி நாதனாகவும் உள்ளனர்.
பிறக்கும் 2024 ல்
பூரட்டாதி முதல் 3 பாதங்களில் பிறந்தவர்களுக்கு சனிபகவான் ஜென்ம
ராசியிலும், ராகு 2ம் இடத்திலும், கேது 8ம் இடத்திலும், குரு 3ம்
இடத்திலும் சஞ்சரிக்கின்றனர். இதனால் முதல் 3 பாதங்களில் பிறந்தவர்களுக்கு
எதிர்பாராத நெருக்கடி, தொழில், பணியில் பிரச்னை, மனதில் குழப்பம்.
வாழ்க்கைத்துணையுடன் சங்கடம் ஏற்படும்.
4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு
12ம் இடத்தில் சனியும், ஜென்ம ராசியில் ராகுவும், 7ம் இடத்தில் கேதுவும்,
தன ஸ்தானத்தில் குருவும் சஞ்சரிக்கின்றனர். வருமானத்தில் தடைகள் விலகும்.
குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். சண்டை,
சச்சரவுகள் எதிரிகளால் இடையூறு என்ற நிலைகள் மாறும். பணஆசை அதிகரிக்கும்,
அதன் காரணமாக தவறான வழியில் செல்லக்கூடிய சூழலும் ஏற்படும்.
சனி சஞ்சாரம்
ஜன
1 - பிப்.15 வரையிலும், மார்ச் 16 - ஜூன் 19 வரையிலும், நவ. 4 - டிச. 31
வரையிலும் தாரா பலனகளாலும், அஸ்தமன, வக்கிர காலங்களிலும் சங்கடங்களில்
இருந்து சனிபகவான் உங்களை விடுவிப்பார். எதிர்பார்த்த நன்மை உங்களால் அடைய
முடியும். முயற்சிகள் யாவும் வெற்றியாகும். வருமானத்தில் தடைகள் விலகும்.
குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். உறவினர்களுடன் அனுசரித்துச் செல்வீர்கள்.
தொழில், வியாபாரத்தில் ஆதாயம் உண்டாகும்.
ராகு, கேது பெயர்ச்சி
ராகு
மீனத்திலும், கேது கன்னியிலும் சஞ்சரிக்கும் நிலையில் முதல் மூன்று
பாதங்களில் பிறந்தவர்களுக்கு 2ம் இடத்தில் ராகு, 8ம் இடத்தில் கேது
சஞ்சரிப்பதால், குடும்பத்தில் பிரச்னை, தொழிலில் பாதிப்பு, வருமானத்தில்
குறைபாடு, வீண் அலைச்சல், செயல்களில் தடைகள், பொருளாதார நெருக்கடி,
உடல்நிலையில் சங்கடம், எதிர்பாராத விபத்து என்று உண்டாகும். 4ம்
பாதத்தினருக்கு தொழிலில் தடுமாற்றம், பணியில் பிரச்னை, வீண் அலைச்சல்,
செயல்களில் நெருக்கடி, வீண்பழி, செய்யாத குற்றத்திற்கு அபராதம், பொருள்
இழப்பு, குடும்பத்தில் பிரச்னை, நோயால் தொல்லை அதிகரிக்கும்.
குரு சஞ்சாரம்
பூரட்டாதி
1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏப்.30 வரை தைரிய ஸ்தானத்திலும்,
மே 1 முதல் சுக ஸ்தானத்திலும் சஞ்சரிக்கும் குருபகவான் எதிர்மறை பலன்களை
வழங்குவார். முயற்சிகள் இழுபறியாவதுடன் வருமானத்தில் தடையுண்டாகும்
என்றாலும் தன் பார்வைகளின் வழியே வளத்தை வழங்குவார், நலத்தை உண்டாக்குவார்.
4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு 2ம் இட குருவால் ஏப்.30 வரை நன்மை
அதிகரிக்கும். வருமானம் உயரும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.
எதிர்பார்ப்பு நிறைவேறும். அதன்பின் 3ம் இடத்தில் சஞ்சரிக்கும் குருவால்
நன்மைகளை வழங்க முடியாமல் போகும். நெருக்கடி நிலை உண்டாகும் என்றாலும் தன்
பார்வைகளால் வாழ்க்கையை வளமாக்குவார்.
சூரிய சஞ்சாரம்
1,2,3 ம்
பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஏப்.14 - மே 13, ஜூலை 17 - ஆக.16, நவ.16 -
டிச.31 வரையிலும், 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஜன.15 - பிப்.12, மே 14 -
ஜூன் 14, ஆக.17 - செப்.16, டிச. 16 - 31 வரையிலும் சூரியன் தன் 3,6,10,11
ம் இட சஞ்சாரங்களால் மற்ற கிரகங்களால் ஏற்படும் சங்கடங்களில் இருந்து
உங்களைப் பாதுகாப்பார். செல்வாக்கை உயர்த்துவார். பணவரவில் இருந்த தடைகளை
விலக்குவார். உடல்நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். தொழில்,
வியாபாரத்தில் லாபத்தை உண்டாக்குவார். பணியாளர்களுக்கு ஏற்பட்ட
பிரச்னைகளில் இருந்து விடுவிப்பார். வழக்குகளில் சாதகமான நிலையை
உண்டாக்குவார். லாபத்தை அதிகரிப்பார்.
பொதுப்பலன்
பிரதான
கிரகங்கள் சாதகமான பலன்களை வழங்க முடியாத நிலையில் சஞ்சரிக்கும் செயல்களில்
நிதானம் அவசியம். முயற்சி இழுபறியாகும். ஆரோக்கியத்தில் பின்னடைவு
உண்டாகும். அதற்காக செலவு அதிகரிக்கும். குடும்பத்திலும் பிரச்னைகள்
ஏற்படும். வர வேண்டிய பணம் வருவதற்கு தாமதமாகும். தொழில், வியாபாரம்
போன்றவற்றில் எதிர்பார்த்த வருமானம் இல்லாமல் மனம் குழப்பமடையும்.
வீண்செலவு அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் பிரச்னைகள் ஏற்பட்டு உங்களை
சங்கடப்படுத்தும்.
தொழில்
தொழிலில் உழைப்பு அதிகரிக்கும்.
திட்டமிட்ட முயற்சிகள் லாபமாகும். விற்பனையில் கூடுதல் கவனம் தேவைப்படும்.
ஊழியர்களை நம்பி எந்தவொரு பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டாம்.
பணியாளர்கள்
தனியார்
நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு அலைச்சலும் வேலையில் சங்கடம்
அதிகரிக்கும். எதிர்பார்த்த வருமானம் இல்லாமல் போகும். அரசுத்துறையில்
பணியாற்றுபவர்கள் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில்
மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரும்.
பெண்கள்
வாழ்க்கைத்
துணையை அனுசரித்துச் செல்வதால் குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். சுயதொழில்
செய்பவர்கள் புதிய முதலீடுகள் செய்வதற்கு முன் பலமுறை யோசிக்க வேண்டும்.
அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் வேலை பளுவிற்கு ஆளாக நேரும். இருந்தாலும்
எதிர்பார்த்த வருமானம் இருக்கும். சிலர், படிப்பிற்காக, வேலைக்காக
வெளிநாட்டிற்கு செல்வர்.
கல்வி
படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஆசிரியர்கள் அறிவுரை இக்காலத்தில் உங்களுக்கு அவசியம்.
உடல்நிலை
திடீர்
திடீரென உடலில் சங்கடம் தோன்றும். இதுநாள்வரை மறைந்திருந்த நோய்கள்
இப்பொழுது தலைக்காட்டும். சிலர் விபத்துகளிலும் சிக்க நேரும் என்பதால்
பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.
குடும்பம்
குடும்பத்தில் ஒரு
நேரம் இருப்பதுபோல் மறு நேரம் நிம்மதி இல்லாமல் போகும். எதிர்பார்ப்பு
இழுபறியாகும். தம்பதியருக்குள் சண்டை ஏற்படும். ஒருவருக்கொருவர்
விட்டுக்கொடுத்து செல்வதால் நிம்மதி உண்டாகும். ஆடம்பர செலவு, வீண் பயணத்தை
தவிர்ப்பது நல்லது. புதிய நபர்களை வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டாம்.
உறவினர்கள் உங்களுக்கு எதிராவர் என்பதால் அவர்களிடம் எச்சரிக்கை அவசியம்.
புதிய முயற்சிகளில் யோசித்து செயல்படுவது நல்லது.
பரிகாரம்; குலதெய்வத்தை வணங்கி வழிபட்டு வருவதுடன் உணவு, உடை தானம் செய்ய நன்மை அதிகரிக்கும்.
உத்திரட்டாதி; முயற்சில் முன்னேற்றம்
சனி, குரு பகவான் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு பிறக்கப் போகும் 2024 வருடத்தில் எந்தவிதமான பலன்களை வழங்கப் போகிறது?
உங்கள் ஜென்ம ராசிக்குள் ராகு, 7ம் இடத்தில் கேது, 12ல் சனி பகவான் சஞ்சரிக்கும் நிலையில் ஆண்டு பிறக்கிறது. இக்காலம் உங்களுக்கு ஏழரைச் சனியின் தொடக்க காலமாகும். அவருடைய பார்வைக்குள் இப்போது நீங்கள் வந்துள்ளீர்கள் என்பதால் பொருளாதாரத்தில் பிரச்னைகள். வீண் அலைச்சல், எதிரிகளால் இடையூறு, வீண் செலவு, உடல்நிலையில் சங்கடம், உறவுகளிடம் பகை என்ற நிலை ஏற்படலாம். ஜென்ம ராகு உங்கள் மனதில் சஞ்சலத்தை உருவாக்கலாம். தவறான பாதைகளுக்கு வழிகாட்டலாம். 7ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேது உறவுகளிடம் பகை, வாழ்க்கைத் துணையிடம் ஒற்றுமை இல்லாத நிலையை உருவாக்கலாம். இந்த நிலையில் 2ம் இடத்தில் ஏப்.30 வரை சஞ்சரிக்கும் குருபகவான் குடும்பத்தில் நிம்மதியை உருவாக்குவார். பிரச்னைகள் இல்லாத சூழ்நிலையை ஏற்படுத்துவார். சங்கடங்களில் இருந்து உங்களைப் பாதுகாப்பார்.
சனி சஞ்சாரம்
மார்ச் 16 - ஜூன் 19 வரையிலும், நவ. 4 - டிச. 31 வரையிலும் தாரா பலன்களாலும் அஸ்தமனம், வக்கிர நிலைகளிலும் விரய சனியின் பாதிப்பில் இருந்து உங்களுக்கு விடுதலை உண்டாகும். வழக்கமான உங்கள் முயற்சிகள் எந்தவித தடைகளும் இல்லாமல் நிறைவேறும். திட்டமிட்டு நீங்கள் செய்யும் செயல்களில் லாபம் உண்டாகும். பிரச்னைகள் வந்தாலும் அதையெல்லாம் சமாளிக்கும் சக்தி ஏற்படும். பணியில் இருந்த நெருக்கடி தீரும். எதிர்பாராத அதிர்ஷ்ட பலன்களால் உங்களுக்கு நன்மை உண்டாகும்.
ராகு - கேது சஞ்சாரம்
ராகு உங்கள் ராசிக்குள்ளும், கேது 7ம் இடத்திலும் சஞ்சரிக்கும் நிலையில் உங்கள் செயல்களில் தடுமாற்றம் உண்டாகும். வீண் அலைச்சல் அதிகரிக்கும். தொழில், பணியில் நெருக்கடிகள் தோன்றும். சிலருக்கு வீண்பழியும், செய்யாத குற்றங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலையும் ஏற்படும். குடும்பத்தில் சங்கடம், பிரச்னை, வாழ்க்கைத் துணையுடன் மனக்கசப்பு, உடல்நிலையில் பாதிப்பு என எதிர்மறையான பலன்கள் உண்டாகும்.
குரு சஞ்சாரம்
ஏப்.30 வரை 2ம் இடத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் உங்கள் வாழ்வில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். எதிர்பார்ப்புகள் எல்லாம் பூர்த்தி செய்வார். பணவரவை அதிகரிப்பார். குடும்பத்தில் இருந்த சங்கடங்களை விலக்கி வைப்பார். கொடுத்த வாக்கை காப்பாற்றும் நிலையை உண்டாக்குவார். பொன், பொருள் சேர்க்கையை ஏற்படுத்துவார். பணியில் உங்கள் நிலையை உயர்த்துவார். தொழிலில் இருந்த பிரச்னைகளை முடிவிற்கு கொண்டு வருவார். வியாபாரத்தில் லாபத்தை அதிகரிப்பார். மே 1 முதல் 3ம் இடத்தில் சஞ்சரிக்கும் குருபகவான் எதிர்பாராத நெருக்கடிகளை ஏற்படுத்துவார். உங்கள் செல்வாக்கில் சங்கடங்கள் உண்டாகும். ஆரோக்கியத்தில் குறைபாடு ஏற்படும். உங்களைச் சுற்றி இருந்தவர்கள் உங்களை விட்டு விலகிச்செல்வர்.
சூரிய சஞ்சாரம்
ஜன 15 - பிப் 12, மே 14 - ஜூன் 14, ஆக 17 - செப் 16, டிச 16 - 31 காலங்களில் சூரியபகவானின் சஞ்சார நிலைகளால் சங்கடங்கள் விலகும். பணியில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும் ஆரோக்கியம் சீராகும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். எதிர்பார்த்த வரவு வந்து சேரும். பொருளாதார நிலை உயரும். வம்பு வழக்குகளில் இருந்து விடுபடுவீர்கள். தொழில் தொடங்குவதற்கு எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். பணியில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். சிலருக்கு பதவி உயர்வு உண்டாகும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு அதிகரிக்கும். வெளிநாட்டிற்கு செல்ல அரசின் அனுமதி கிடைக்கும்.
பொதுப்பலன்
குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் தோன்றும். அலைச்சல் அதிகரிக்கும். வேலைகளில் டென்ஷன் உண்டாகும். சிலருக்கு மேற்படிப்பிற்காகவும், வேலைக்காகவும் வெளிநாட்டிற்கு செல்லும் நிலை உண்டாகும். புதிய நட்புகளால் தேவையற்ற பிரச்னைகள் தோன்றும். வீண்பழி, குடும்பத்தில் குழப்பம் தோன்றும். வியாபாரம், தொழிலில் புதிய முதலீடுகள் செய்வதற்கு முன் யோசிப்பது நன்மையாக இருக்கும். புதியவர்களை நம்பி எந்தவித முயற்சிகளிலும் ஈடுபடக் கூடாது. உங்களுக்கு சரி என்று தோன்றுகின்ற விஷயத்தில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.
தொழில்
தொழிலில் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மை தரும். பங்கு வர்த்தகம், பைனான்ஸ், ஹார்டுவேர்ஸ், நகை, வியாபாரம், ரியல் எஸ்டேட், பதிப்பகம், கல்விக்கூடங்கள் உங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றும்.
பணியாளர்கள்
பணிபுரியும் இடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். உங்கள் வேலைகளை ஒட்டி வெளியூர் பயணம் உண்டாகும். சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். எதிர்பார்த்த ஊதிய உயர்வு உண்டாகும். அரசுத்துறையில் இருப்பவர்கள் மேலதிகாரிகளின் பாராட்டிற்கு ஆளாவீர்கள். விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு ஏற்படும்.
பெண்கள்
குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். திருமண வயதினருக்கு வரன் தேடி வரும். வேலைவாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு வேலை அமையும். சிலருக்கு வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லும் வாய்ப்பு உண்டாகும். நீண்டகாலம் நட்பாக பழகியவர்கள் உங்களை விட்டு விலகுவர். வாழ்க்கைத் துணையுடன் அனுசரித்துச் செல்வீர்கள். பொன், பொருள் சேரும். புதிய நட்புகளால் சில சங்கடம், அவப்பெயருக்கு ஆளாக நேரிடும். இக்காலத்தில் எதிர்பாலினரை தள்ளி வைத்து பழகுவது நல்லது.
கல்வி
இக்காலத்தில் படிப்பில் முழுகவனம் செலுத்த வேண்டியது அவசியம். ஆசிரியர்களின் ஆலோசனை உங்களுக்கு நன்மையை உண்டாக்கும்.
உடல்நிலை
பரம்பரை நோய், தொற்று நோய் போன்றவற்றால் இக்காலத்தில் சங்கடம் தோன்றும். பருவ நோய்களால் பாதிப்பிற்கு ஆளாவீர்கள். உடல் அடிக்கடி சோர்வடையும். மருத்துவச் செலவு அதிகரிக்கும்.
குடும்பம்
ஜென்ம ராகு, 7ம் இட கேது, விரயச் சனி என்ற நிலையில் குடும்பத்தில் எதிர்பாராத சங்கடங்கள் ஏற்படும். நட்புகளால் குடும்பத்திற்குள் பிரச்னை உண்டாகும். மனதில் இனம் புரியாத சங்கடமும் பயமும் தோன்றும். புதிய முயற்சிகள் இழுபறியாகும். அதே நேரத்தில் செலவிற்கேற்ற வருவாய் வந்து சேரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். வெளிநாட்டு தொடர்புகள் ஆதாயத்தை ஏற்படுத்தும். வருமானத்திற்காக வெளிநாட்டிற்கு செல்லும் முயற்சி வெற்றியாகும்.
பரிகாரம்; ஐயாவாடி பிரத்யங்கிரா, வனபத்ர காளியை வழிபட்டு வர சங்கடங்கள் விலகும். நன்மை அதிகரிக்கும்.
ரேவதி; செயல்களில் சங்கடம்
புதபகவான், குருபகவான் அம்சத்தில் பிறந்திருக்கும் உங்களுக்கு பிறக்கும் வருடமான 2024 எத்தகைய பலன்களை வழங்கப் போகிறது?
உங்கள் ராசிக்கு 2ம் இடமான குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருபகவானால் உங்களுக்கு எத்தனை சங்கடங்கள் வந்தாலும் அதையெல்லாம் எதிர்கொள்ளும் சக்தி உங்களுக்கு உண்டாகும் குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். எதிர்பார்த்த வரவுகள் வந்து சேரும். விரய ஸ்தானம் என்னும் 12ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனிபகவானால் காரியத்தில் தேக்கம், வருமானத்தில் குறைபாடு உண்டாகும். பொருள் விரயமாகும். வீண் அலைச்சல், மன உளைச்சல் ஏற்படும். மதிப்பிற்கும் கவுரவத்திற்கும் பங்கம் உண்டாகும். ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் ராகுவும், ஏழாமிட கேதுவும் உங்கள் நிலையில் பெரிய மாற்றங்களை உண்டாக்குவர்.
சனி சஞ்சாரம்
சனி பகவானின் சஞ்சார நிலை உங்களுக்கு சாதகமாக இல்லை என்றாலும் ஜன 1 - பிப் 15, காலத்தில் தாரா பலனாலும், அஸ்தமனம், வக்கிர நிலைகளிலும் விரயச்சனியின் பாதிப்பில் இருந்து விடுபடுவீர்கள். முயற்சி யாவும் லாபமாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். இதற்கு முன்பிருந்த சங்கடங்கள் முடிவிற்கு வரும். தடைப்பட்ட முயற்சி முடிவிற்கு வரும். பணவரவு அதிகரிக்கும். சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை ஏற்படும். பணியின் காரணமாக வெளியூருக்கு செல்லும் நிலை சிலருக்கு ஏற்படும். புதிய பொறுப்பு, பதவிகள் வந்து சேரும்.
ராகு - கேது சஞ்சாரம்
உங்கள் ராசிக்குள் ராகுவும், 7ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேதுவும் அலைச்சலை அதிகரிப்பர். பிரச்னைகளில் உங்களை சிக்க வைப்பர். அதே நேரத்தில் யோகப் பலன்களை வழங்குவர். சட்டரீதியான பிரச்னைகளையும் சந்திக்க வைப்பர். தீயவரோடு சேர வைப்பர். வாழ்க்கைத் துணையோடு பிரச்னை, நண்பர்களுக்குள் கருத்து வேறுபாடு, கூட்டுத்தொழிலில் சங்கடம், மனதில் பயத்தை உண்டாக்குவர்.
குரு சஞ்சாரம்
ஏப்.30 வரை குடும்ப ஸ்தானமான 2ம் இடத்தில் சஞ்சரிக்கும் குருபகவான், குடும்பத்தில் இருந்த சங்கடங்களை விலக்கி வைப்பார். பணவரவு அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். எதிர்ப்பு நீங்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். பணியில் எதிர்பார்த்த இட மாற்றமும், பதவி உயர்வும் உண்டாகும். வியாபாரம், தொழிலில் லாபம் அதிகரிக்கும். புதிய முயற்சி வெற்றியாகும். உடல்நிலை சீராகும். மே 1 முதல் 3ம் இடத்தில் சஞ்சரிக்கும் குருபகவானால் எதிர்பார்ப்பு இழுபறியாகும். முயற்சிகளில் சங்கடம் தோன்றும். நண்பர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வர். உடல் நிலையிலும் மன நிலையிலும் பாதிப்பு உண்டாகும். உறவுகளிடம் பிரச்னைகள் தோன்றும்.
சூரிய சஞ்சாரம்
ஜன 15 - பிப் 12, மே 14 - ஜூன் 14, ஆக.17 - செப்.16, டிச.16 - 31 காலங்களில் சூரிய பகவானின் சஞ்சார நிலை சாதகமாக இருப்பதால் நினைத்தது நினைத்தபடி நடந்தேறும். முயற்சிகள் யாவும் வெற்றியாகும். துணிச்சலுடன் செயல்படுவீர்கள். ஆரோக்கியம் சீராகும். எதிரிகள் விலகிச் செல்வர். வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். அலுவலகத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைக்கும்.
பொதுப்பலன்
விரய சனியின் காலம் என்றாலும் ஏப். 30 வரை 2ம் இட குருவும், சூரிய பகவானும், செவ்வாய் பகவானும் இந்த ஆண்டில் உங்களுக்கு நன்மைகளை அதிகரிப்பர். விரய சனியின் தாக்கத்திலிருந்து உங்களைப் பாதுகாப்பார்கள். முயற்சிகள் வெற்றியாகும். நெருக்கடி விலகும். பண வரவில் இருந்த தடைகள் நீங்கும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் தீரும், வழக்கு, விவகாரங்களில் சாதகமான நிலை ஏற்படும். வெளிநாட்டு முயற்சி ஆதாயம் தரும். தொலைந்து போன பொருட்கள் கிடைக்கும். உங்கள் மதிப்பு உயரும்.
தொழில்
தொழிலில் கவனம் அதிகரிக்கும். கடந்த கால அனுபவத்தைக் கொண்டு தொழிலில் வெற்றியடைவீர்கள். முதலீட்டில் லாபம் காண்பீர்கள். சிலர் வெளிநாட்டு தொடர்புடைய வர்த்தகத்தில் ஈடுபடுவீர்கள்.
பணியாளர்கள்
பணிபுரியும் இடத்தில் நன்மை அதிகரிக்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். முதலாளி உங்கள் திறமைக்கு மதிப்பளிப்பார். அரசு பணியாளர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு உண்டாகும். சிலருக்கு விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும்.
பெண்கள்
சாதுரியமாக செயல்பட்டு நினைத்ததை சாதிக்கும் உங்களுக்கு, இக்காலத்தில் யாவும் நன்மையாகும். வாழ்க்கைத் துணையின் எண்ணத்தை புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். புதிய நட்புகளை எடை போட்டு அங்கீகரிப்பீர்கள். பணியில் கவனம் செலுத்தி மேலதிகாரியின் ஆதரவைப் பெறுவீர்கள். தனியார் நிறுவத்தில் பணிபுரிபவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும். சுயதொழில் செய்து வருபவர்கள் தொழிலை விரிவு செய்து லாபம் அடைவீர்கள். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். எந்த ஒன்றையும் சமாளித்து வெற்றி பெறக்கூடிய சக்தி ஏற்படும்.
கல்வி
இக்காலத்தில் படிப்பில் கவனம் சிதறும் என்பதால் எதிர்காலத்தை மனதில் வைத்து ஆசிரியர்களின் ஆலோசனைகளை ஏற்பது நலமாகும்.
உடல்நிலை
பரம்பரை நோய், பருவ நோய்களால் எதிர்பாராத பாதிப்பு உண்டாகும். ஏழரைச் சனியின் காலம் என்பதால் ஏதாவது கோளாறு உடலில் இருந்து கொண்டே இருக்கும். மருத்துவச் செலவு அதிகரிக்கும்.
குடும்பம்
குடும்பத்தின் மீது எப்போதும் அக்கறை உண்டாகும். ஏப் 30 வரை 2ம் இட குருவால் குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்வுகள் நடந்தேறும். சிலர் புதிய வீட்டிற்கு குடியேறுவர். தம்பதிகள் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வதும், பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவதும், நேர்மையான வழியில் செல்வதும் குடும்பத்தில் நன்மையை அதிகரிக்கும்.
பரிகாரம்; திருவெண்காடு புதன் பகவானை வழிபட்டு அன்னதானம் செய்ய நன்மை அதிகரிக்கும்.