மகரஜோதி நாளில் பக்தர்கள் எண்ணிக்கையை குறைக்க போலீஸ் தரப்பில் இருந்து தேவசம்போர்டுக்கு கடிதம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜன 2024 08:01
சபரிமலை; மகர ஜோதி நாளில் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையை மேலும் குறைக்க வேண்டும் என்று போலீஸ் தரப்பில் இருந்து தேவசம்போர்டு ஆணையர் மற்றும் நிர்வாக அதிகாரிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
சபரிமலையில் மகரஜோதி தரிசனம் ஜன.15-ல் நடக்கிறது. ஜோதி நாளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் ஜன. 14, 15க்கான முன்பதிவு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தான் தொடங்கியது. திருவிதாங்கூர் தேவசம்போர்டு இந்த சீசனில் அனுமதித்ததை விட குறைவான பக்தர்களுக்கு முன்பதிவு வழங்கியிருந்தது.
கடிதம்; ஆனால் மகரஜோதி, அதற்கு முந்தைய நாளிலும் பக்தர்களின் எண்ணிக்கையை மேலும் குறைக்க வேண்டும் என்று கேட்டு பத்தனம்திட்டா போலீஸ் அலுவலகத்தில் இருந்து திருவிதாங்கூர் தேவசம்போர்டு ஆணையர் மற்றும் நிர்வாக அதிகாரிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் ஜன. 14-ல் 40 ஆயிரம் பேருக்கும், ஜன. 15ல் 20 ஆயிரம் பேருக்கும் தரிசனத்திற்கு முன்பதிவு வழங்கினால் போதுமானது என்று கூறப்பட்டுள்ளது. பம்பை ஆஞ்சநேயா ஆடிட்டோரியத்தில் உள்ள ஸ்பாட் புக்கிங் கவுன்டரை மூட வேண்டும் என்றும், ஸ்பாட் புக்கிங்கை நிலக்கல்லில் மட்டுமே கொடுக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது . கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது இந்த ஆண்டு பக்தர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளதால் பாதுகாப்பு கருதி இந்த கடிதம் அனுப்பப்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இதில் தேவசம்போர்டு தரப்பில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.