சபரிமலையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கூட்டம்; அரவணை டின்களுக்கு தட்டுப்பாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜன 2024 04:01
சபரிமலை; சபரிமலையில் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில் அரவணை டின்னுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பிரசாத வினியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வழிகளில் பக்தர்கள் மீண்டும் தடுக்கப்படுவதால் பக்தர்கள் ரோடு மறியலில் ஈடுபடும் சம்பவம் தொடங்கியுள்ளது.
மகர விளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை நடை கடந்த 30 மாலை திறந்தது. 31 முதல் நெய்யபிஷேகம் மற்றும் வழக்கமான பூஜைகள் நடைபெற்று வருகிறது. நடை திறந்த நாள் முதல் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் 18 படி ஏறுவதற்கான கியூ எல்லா நாட்களிலும் சரங்குத்தியையும் கடந்து மர கூட்டம் வரை காணப்படுகிறது. நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததன் காரணமாக நிலக்கல் வரும் பாதைகளில் வாகனங்களை தடுத்து நிறுத்த சன்னிதானம் போலீசில் இருந்து உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. இதனால் இடமண், பெருநாடு சபரிமலை பாதையில் கண்ணம்பள்ளியில் பக்தர்களின் வாகனங்கள் தடுக்கப்பட்டது .பக்தர்கள் கேட்டதற்கு மேலிடத்து உத்தரவு காரணமாக வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த இடங்களில் கடைகளோ, அல்லது உணவு தயாரிப்பதற்கான வசதிகள் இல்லாததால் பக்தர்கள் தங்களை தொடர்ந்து செல்ல அனுமதி கோரியும் போலீசார் மறுத்தனர். இதற்கிடையில் ரான்னி பகுதியிலிருந்து வந்த வாகனங்கள் அத்திக்கயம் வழியாக அனுப்பப்படுவதை கண்ட பக்தர்கள் ரான்னி -அத்திக்கயம் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர் .இதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட பக்தர்களை நிலக்கலுக்கு அனுப்பினர்.இதுபோல எருமேலிலும் மறியல் போராட்டம் நடைபெற்றது. பக்தர் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில் சபரிமலையில் அரவணை டின்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அரவணை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு டின் ஆறு ரூபாய் 47 பைசா என்ற கட்டணத்தில் தினசரி ஒரு லட்சத்து 30 ஆயிரம் டின் வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் அந்த நிறுவனம் சுமார் 65,000 மட்டுமே வழங்கியது. இதனால் டின்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, தினசரி உற்பத்தி மூன்று லட்சத்திலிருந்து இரண்டு லட்சத்து 30 ஆயிரம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு பக்தருக்கு 10 டின் அரவணை என்பது ஐந்து டின்னாக குறைக்கப்பட்டது. இந்த பிரச்சினையை சமாளிக்க திருவிதாங்கூர் தேவசம்போர்டு புதிய டெண்டர் கோரி உள்ளது.