முள் படுக்கையில் தவம் செய்த பெண் சாமியார்; வரம் வேண்டி வந்த பக்தர்களுக்கு அருளாசி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜன 2024 08:01
திருப்புவனம்; திருப்புவனம் அருகே லாடனேந்தல் முத்துமாரியம்மன் கோயிலில் பெண் சாமியார் முள் படுக்கையில் தவம் செய்த காட்சியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து அருளாசி பெற்று சென்றனர். லாடனேந்தல் முத்துமாரியம்மன் கோயிலில் வருடம்தோறும் மார்கழி 18ம் தேதி நாகராணி அம்மையார் என்பவர் விரதம் இருந்து முள்படுக்கையில் பக்தர்களுக்கு அருளாசி வழங்குவது வழக்கம். முத்துமாரியம்மன் கோயில் மண்டலாபிஷேக விழாவை ஒட்டி நடத்தப்படும் இக்காட்சியில் பெண் சாமியாரிடம் அருளாசி வாங்க ஏராளமான பெண்கள் கூட்டம் அலைமோதும். இந்தாண்டு விழா கடந்த மாதம் தொடங்கியது. லாடனேந்தலைச் சுற்றியுள்ள காடுகளில் இருந்து உடைமுள், கற்றாழை முள், இலைக்கற்றாழை முள், உள்ளிட்ட பல்வேறு வகை முட்களை கொண்டு எழு அடி உயரத்திற்கு முள்படுக்கை அமைக்கப்படுகிறது. நாகராணி அம்மையார் முத்துமாரியம்மன், விநாயகர் உள்ளிட்டோரை தரிசனம் செய்த பின் முள்படுக்கைக்கு சிறப்பு பூஜைகள் செய்து புண்ணிய தீர்த்தம் தெளித்தபின் அதில் ஏறி நின்று சாமியாடி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். பின் அப்படியே முள்படுக்கையில் சுமார் ஒரு மணி நேரம் படுத்தபடியே காட்சியளித்தார். குழந்தை வரம், திருமணம் வரம், வேலையின்மை உள்ளிட்ட பல்வேறு வரம் வேண்டி வந்த பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
பக்தர்கள் கூறுகையில் : சாதாரணமாக காலில் சிறிய முள் குத்தினாலே மூன்று நாட்களுக்கு வேதனை இருக்கும் ஆனால் நாகராணி அம்மையார் பல வருடங்களாகவே முள்படுக்கையில் படுத்து கொண்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருகிறார். பின் பொங்கலன்று இந்த முள்படுக்கையில் தீ வார்த்து அதில் இறங்குவார். முள் படுக்கை சாம்பலை எடுத்து வந்து பூஜை செய்து பலரும் திருநீறாக பூசுவதும் வழக்கம், என்றனர். முள் படுக்கையில் அமர்ந்து தவம் செய்யும் நாகராணி அம்மையாரிடம் ஆசி வாங்க ஏராளமான பக்தர்கள் வருகை தந்திருந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை மாரிமுத்து சுவாமிகள், முத்துராமலிங்கம் உள்ளிட்ட பக்தர்கள் செய்திருந்தனர்.