சபரிமலையில் 15 மகரஜோதி பெருவிழா; அதிகாலை 2:40.க்கு மகர சங்கரம பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜன 2024 07:01
சபரிமலை; சபரிமலையில் வரும் 15 -ல் மகர ஜோதி தரிசனம் மற்றும் அன்று அதிகாலை மகர சங்கரம பூஜையும் நடைபெறும். இதற்காக வரும் 13-ல் பந்தளத்தில் இருந்து திருவாபரணப் பவனி புறப்படுகிறது.
சபரிமலையில் மகர விளக்கு காலத்தின் முக்கிய நிகழ்வாக மகரஜோதி தரிசனம் வரும் 15-ல் நடைபெறுகிறது. பொன்னம்பல மேட்டில் தெரியும் மகரஜோதியையும் அந்த நேரத்தில் வானில் ஜொலிக்கும் மகர நட்சத்திரத்தையும் தரிசிக்க பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் சபரிமலை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர். மகரஜோதி விழாவின் முன்னோடியாக பிரசித்தி பெற்ற அம்பலப்புழா, ஆலங்காடு பக்தர்களின் பேட்டை துள்ளல் 12-ல் எருமேரியில் நடைபெறும். அன்று காலை 11:00 மணிக்கு பின்னர் ஆகாயத்தில் வட்டமிடும் கருடனை கண்ட பின்னர் அம்பலப்புழா பக்தர்களும், மாலை 3.00 மணிக்கு பின்னர் ஆகாயத்தில் ஜொலிக்கும் மகர நட்சத்திரத்தை கண்ட பின்னர் ஆலங்காடு பக்தர்களும் பேட்டை துள்ளுவர். இதை தொடர்ந்து எரிமேலியில் பேட்டை துள்ளல் நிறைவு பெறும்.
13-ல் பந்தளத்தில் இருந்து திருவாபரண பவனி புறப்படுகிறது. பந்தளம் மன்னர் குடும்பத்தில்ஜோதி திருநாள் அம்பிகா தம்புராட்டி 72, காலமானதை தொடர்ந்து பந்தளம் வலிய சாஸ்தா கோயில் அடைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு திருவாபரணப் பெட்டிகள் இந்த கோயிலுக்குள் கொண்டு சென்று பூஜைகள் எதுவும் நடைபெறாது. தனியாக சுத்தி பூஜை செய்யப்பட்ட இடத்தில் திருவாபரண பெட்டிகள் வைக்கப்பட்டு பவனி புறப்படும். பந்தளம் மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மன்னர் பிரதிநிதியாக இந்த பவனியில் இடம்பெற மாட்டார்கள். இந்த பவனி 15 மாலை சபரிமலை வந்தடையும்.
சபரிமலையில் மகரஜோதி நாளில் நடைபெறும் மகர சங்கரம பூஜை 15 அதிகாலை 2:40 -க்கு நடைபெறும். சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு கடக்கும் முகூர்த்தத்தில் இந்த பூஜை நடைபெறும். இந்த நேரத்தில் திருவிதாங்கூர் அரண்மனையில் இருந்து கொடுத்துவிடப்படும் நெய் தேங்காய் உடைக்கப்பட்டு நேரடியாக ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்யப்படும். இதற்காக சபரிமலை நடை அன்று அதிகாலை 2:20 மணிக்கு திறக்கப்படும்.
மகர சங்கரம பூஜை முடிந்த பின்னர் தொடர்ந்து பக்தர்கள் தரிசனமும் நெய் அபிஷேகம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகளும் நடைபெறும். 15 மாலை 5: 30 -க்கு திருவாபரணம் சரங்குத்தி வந்ததும் தேவசம்போர்டு ஊழியர்கள் வரவேற்று பவனியை அழைத்து வருவர். 6:30 -க்கு ஸ்ரீ கோயில் முன்பு தந்திரியும் மேல் சாந்தியும் திருவாபரண பெட்டியை வாங்கி ஸ்ரீ கோயிலுக்குள் சென்று நடை அடைத்து ஆபரணங்களை அணிவித்து நடை திறந்து தீபாராதனை நடத்துவர்.
இந்த நேரத்தில் பொன்னம்பலமேட்டில் மகரஜோதியும், மகர நட்சத்திரமும் பக்தர்களுக்கு காட்சி தரும். இதனை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர். ஜோதி நாளில் ஏற்படும் நெரிசலை தவிர்க்கும் வகையில் ஆன்லைன் முன்பதிவு குறைக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் முதல் ஸ்பாட் புக்கிங் ரத்து செய்யப்பட்டுள்ளது. கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்படுவர் என்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருக்கும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் அரவணை கட்டுப்பாடு இன்று முதல் நீக்கப்படும் என்று தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. கூடுதலாக தேர்வு செய்யப்பட்ட இரண்டு ஒப்பந்ததாரர்கள் அனுப்பி உள்ள அரவணை டின் பம்பை வந்ததை தொடர்ந்து டிராக்டர்கள் மூலம் அவை சன்னிதானத்துக்கு கொண்டுவரப்பட்டது. அரவணை உற்பத்தியும் அதிகரிக்கப்பட்டுள்ளதால் இன்று முதல் கட்டுப்பாடு நீங்கும் என்று தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.