சபரிமலையில் மீண்டும் கட்டுக்கடங்காத கூட்டம்.. நீண்ட நேரம் காத்திருப்பு; தரிசனம் முடிக்காமல் திரும்பும் பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜன 2024 04:01
சபரிமலை; சபரிமலையில் மீண்டும் நீண்ட காத்திருப்பு காரணமாக பக்தர்கள் தரிசனம் முடிக்காமல் திரும்பும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சபரிமலை சீசனை சமூகமாக முடிப்பதில் தேவசம் போர்டும், கேரள அரசும் தோல்வியை நோக்கி செல்கிறது.
சபரிமலையில் திருப்பதி மாடல் என்ற ஒரு திட்டத்தை கேரளா அரசு அறிவித்து ஆன்லைன் முன்பதிவு மூலம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் திருப்பதி மாடலுக்கான எந்த ஏற்பாடுகளும் இங்கு செய்யப்படவில்லை. மண்டல காலத்தில் பக்தர்கள் வேதனையுடனும் கண்ணீருடனும் 18 மணி நேரம் காத்திருந்தும் ஐயப்பனை ஒரு கண் பார்க்க முடியாமல் திரும்பச் சென்ற சம்பவங்கள் ஏராளம் நடைபெற்றது. தரிசனத்திற்கு 18 மணி நேரம், பிரசாதத்துக்கு நான்கு மணி நேரம், அன்னதானம் சாப்பிட வேண்டும் என்றால் ஆறு மணி நேரம் இப்படி எல்லா இடங்களிலும் கியூவில் நின்று பக்தர்கள் தளர்ந்து விடுகின்றனர். ஆனால் இதற்கெல்லாம் எந்த தீர்வும் தேவசம்போர்டிடம் இல்லை. அரவணை கூட்டுப்பாடு காரணமாக ஐந்து டின் அரவணை கொடுக்கப்படுவதால் அங்கும் நீண்ட கியூ காணப்படுகிறது.
மகர விளக்கு சீசன் கடந்த 30ல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மண்டல காலம் போலவே மகர விளக்கு காலத்திலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஒரு நாளில் எத்தனை பக்தர்களை அனுமதிக்க முடியும் என்ற கணக்கில்லாத தேவசம்போர்டு தினமும் ஒரு லட்சம் பேர் தரிசனம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறது.ஆனால் பம்பையில் இருந்து சன்னிதானம் பெரிய நடை பந்தல் வருவதற்கு பக்தர்கள் 14 முதல் 16 மணி நேரம் கியூவில் நிற்கின்றனர். :அளவுக்கு அதிகமான கூட்டம் வந்ததால் பம்பையில் பக்தர்கள் தடுக்கப்பட்டனர். வாகனங்கள் பழைய மீண்டும் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்படுகிறது.முன்பு எந்த ஆண்டும் இல்லாத அளவு இந்த ஆண்டு மட்டும் பக்தர்களின் இந்த நீண்ட காத்திருப்பதற்கு காரணம் என்ன என்பதற்கு கேரளா அரசோ தேவசம்போர்டோ இதுவரை விளக்கம் அளிக்கவில்லை. காணிக்கை வருமானத்திலும் குறைவு, பக்தர்கள் எண்ணிக்கையிலும் குறைவு, ஆனால் இந்த நீண்ட காத்திருப்பு எதற்காக என்ற கேள்விக்கு யாரும் இதுவரை பதில் அளிக்கவில்லை. மாறாக பக்தர்கள் கண்ணீர் விட்டு கதறுகின்ற சம்பவங்கள் நடைபெறுகிறது.
நீண்ட நேர காத்திருப்புக்கு பின்னர் 18 படி ஏறி தரிசனத்திற்கு சென்ற தஞ்சாவூர் பக்தர் தயானந்த் 24, என்பவரை போலீசார் தாக்கிய சம்பவம் விவாதத்தை கிளப்பியுள்ளது. இவர் சன்னிதானம் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நீண்ட நேர காத்திருப்பு, தூக்கமின்மை காரணமாக தரிசனம் முடிந்த பக்தர்கள் உடனடியாக பம்பை திரும்புவதற்கு பதிலாக சன்னிதானத்திலேயே ஆங்காங்கே தூங்குவதால் சன்னிதானத்திலும் கூட்ட நெரிசல் காணப்படுகிறது. நேற்று காலையில் நாகர்கோவிலில் இருந்து புறப்பட்ட 15 பேர் கொண்ட பக்தர்கள் குழுவினர் நேற்று மதியம் வரையிலும் சன்னிதானம் அருகே செல்ல முடியாததால் இந்த குழுவை சேர்ந்த ஆனந்த உட்பட சில பக்தர்கள் தரிசனம் நடத்தாமலே திரும்பி விட்டனர். சிலர் தங்கள் இரு முடியை பிற பக்தர்களிடம் கெஞ்சி கூத்தாடி அபிஷேகம் செய்யும்படி கூறிவிட்டு திரும்புகின்றனர். காத்திருப்புக்கான காரணத்தை கேரளா அரசோ, தேவசம் போர்டோ ஆராய்ந்து அறிய முன் வராதது மிகவும் கவலைக்குரிய விஷயம் என்று பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். தேவசம் போர்டுக்கு வருமானம் முக்கியம்தான் அதற்காக பக்தர்களை இப்படி நரக வேதனைக்குள் தள்ளக் கூடாது என்று பெயர் வெளியிட விரும்பாத ஒரு பக்தர் தெரிவித்தார். தமிழகத்திலிருந்து செல்லும் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவது பற்றி கேட்பதற்கு தமிழக அரசு தயாராகாமல் பிஸ்கட் அனுப்புவதிலும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் முன் வரிசையில் இன்று சாமி கும்பிடுவதிலும் தான் கவனம் செலுத்துவதாக பக்தர்கள் குறை கூறுகின்றனர். பக்தர்களின் சிரமங்களுக்கும் கஷ்டங்களுக்கும் கண்ணீருக்கும் விடை கிடைக்காமல் மண்டல மகர விளக்கு கால சீசன் இன்னும் சில நாட்களில் நிறைவு பெற உள்ளது. மிகப்பெரிய புண்ணிய ஸ்தலத்தில் ஒரு சீசனை நடத்துவதில் தேவசம் போடும் அரசும் தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.