அனுமன் ஜெயந்தி; ராம நாமம் சொல்லி வழிபட ஆஞ்சநேயர் அருள் கிடைக்கும்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜன 2024 01:01
மார்கழி மாதம் அமாவாசை மூலம் நட்சத்திரத்தில் அவதரித்தவர் அனுமன். அனுமனுக்கு நாடெங்கும் பல கோயில்கள் உள்ளன. அனுமனைச் சிவபெருமானின் அவதாரம் என்றும் கூறுவதுண்டு. வாயுதேவனுக்கும் அஞ்சனாதேவிக்கும் பிறந்தவர் இவர். ஆஞ்சநேயரை ராம நாமத்தால் சேவிப்பதோடு, வடைமாலை சாத்தி, வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணெய் சாத்தி, ஆராதிக்க வேண்டும். வாலில் குங்குமப்பொட்டு வைத்து தியானித்தும் பூஜிக்கலாம். ராமருக்கு அத்யந்த பக்தராகவும் அரிய தொண்டராகவும் பாத சேவை புரியும் பரம பக்தராகவும் விளங்குபவர் ஆஞ்சநேய மகாப்பிரபு! ராமாயணம் என்னும் மணிஹாரத்தில் நடுநாயகமாக விளங்குபவர் ஆஞ்சநேயர்! அவல், சர்க்கரை, தேன், பானகம், நீர்மோர், கதலிப்பழம், கடலை முதலிய நிவேதனப் பொருட்களை அவர் விரும்பி அமுது செய்து மகிழ்வார். இப்படி கண்ணனும், மாருதியும் ஒற்றுமையோடு இணைந்திருப்பதால் தான் வெண்ணெயை மாருதிக்கு சாத்தி வழிபடுகிறார்கள். ஸ்ரீராம உற்சவம் கொண்டாடும் இடங்களில் எல்லாம் ஆஞ்சநேயர் நேரில் வந்து அடியார்களுள் அடியாராய்-பக்தருள் பக்தராய் அமர்ந்து உபன்யாசத்தைப் பேரானந்தத்துடன் ரசித்து அனைவருக்கும் சலக சந்தோஷங்களையும் சுபிட்சங்களையும் வாரி வழங்கிப் பேரருள் புரிகிறார். இதனால் தான் துளசி தாசர் ராமாயண பிரவசனம் தொடங்கும் முன்னர் பக்தர்களை ப்ரதட்சணமாக வருவார். அந்த பக்தர்களோடு பக்தராக மாருதியும் எழுந்தருளி இருப்பார் என்பது அவருக்கு தெரியும். ஆஞ்சநேயரை வழிபட்டால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம். எல்லோரையும் கலங்கச்செய்யும் சனிபகவனையே ஒரு முறை இவர் கலங்கச் செய்தார். இதனால் சனி தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இவரை வழிபடுவது சிறப்பு.