பதிவு செய்த நாள்
03
ஜன
2024
11:01
மார்கழி சுக்லபட்ச அஷ்டமி திதியில் அஷ்டமி பிரதட்சணம் நடக்கும். ஒரு நாள் சிவபெருமானும், உமாதேவியாரும் ஏகாந்தமாயிருக்கும் சமயம் தேவி தாய்க்கேயுரிய கவலையுடன், ‘ஏன் சுவாமி! இவ்வுலகில் தோன்றிய உயிர்கள் இறக்கும் வரை துன்பத்திற்கும், பாவத்திற்கும் ஆளாகும் நிலை மாற வழியில்லையா? பிறப்பு, இறப்பின்றி முக்தி அடையவும், பாவங்கள் நீங்கவும் ஒரு வழி சொல்லுங்கள்’ என்றாள். அச்சமயம் உயிர்களுக்கெல்லாம் தந்தையான சிவபிரான் திருவாலவாய் எனப்படும் மதுரையின் சிறப்பை எடுத்துக் கூறியதோடு அஷ்டமி பிரதட்சிணம் பற்றியும் தேவிக்கு விரிவாக விளக்கினார். மதுரையில் வாழ்ந்து அஷ்டமி பிரதட்சிணம் செய்வோர்க்கு இகபர துன்பம் நீங்கி முக்தி கிடைப்பது உறுதி என்றும் கூறினார்.
இந்த அஷ்டமி திருநாளில் மதுரை பொற்றாமரைக் குளத்தில் நீராடி, நித்ய நியமங்களை நிறைவேற்றி, மனதில் ஸ்ரீமீனாட்சி சுந்தரேசரை தியானித்து, ஸ்ரீபஞ்சாட்சர ஜபத்தை வாயினால் ஓதிக் கொண்டு, மதுரையில் ஏழு வீதிகளை (வெளி வீதி, மாசிவீதி, ஆவணிவீதி,சித்திரை வீதி,ஆடி வீதி,சுவாமி சன்னதி 2 வீதி) னைத்து வீதிகளையும், பிரகாரங்களையும் வலம் வந்து, ஆலயத்திலுள்ள எழுந்தருளியுள்ள மூர்த்திகளையும் தரிசித்து, சந்நதியில் நமஸ்கரித்து, தங்கள் வீடு சென்று, தங்கள் வசதிக்கேற்ப நெய், தேன், தயிர் இவற்றோடு சிவபக்தர்களாகிய அந்தணருக்கு போஜனம் செய்வித்து, அவர்களது ஆசிகளைப் பெற்றால் அவர்களுக்கு முக்தியும், கைலாய வாசமும் கிட்டுவது உறுதி.
எனவே, மார்கழி மாத சுக்லபட்ச அஷ்டமி திதியில் சிவாலயத்தில் பிரதட்சிணம் செய்ய வேண்டும். இவ்வாறு பிரட்சிணம் செய்வதால் ஓர் அடிக்கு ஓர் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். வலம் வரும்போது எறும்புப் புற்றுகளுக்கு அரிசியிட வேண்டும். அவ்வாறு செய்தால் இலட்சம் பேருக்கு போஜனம் செய்த பலனை அடைவர். எவ்வளவு பாபம் செய்தவராயினும் அஷ்டமி பிரட்சிணத்தால் முக்தி அடைவர்.