பதிவு செய்த நாள்
14
ஜன
2024
07:01
புதுடில்லி: புதுடில்லியில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வீட்டில் இன்று( ஜன.,14) நடந்த பொங்கல் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். விழாவில் தமிழகத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.
மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை, இணையமைச்சர் எல்.முருகன், டில்லியில் தனது வீட்டில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகிறார். இந்தாண்டு பொங்கல் விழாவை முன்னிட்டு கரகாட்டம், பறையாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. முருகன் வீடு, கரும்பு, மஞ்சள், வாழை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. வீட்டின் முன்பு பசுமாடும், ஜல்லிக்கட்டு காளையும் கட்டப்பட்டு இருந்தது. இந்த விழாவில் பிரதமர் மோடி வேட்டி, சட்டையுடன் தமிழர்களின் பாரம்பரிய உடையுடன் பங்கேற்றார். தொடர்ந்து, பானையில் மோடி பொங்கல் இட்டார்.
தமிழில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி.. நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
விளைவித்த நெல்மணிகளை பொங்கலின் போது இறைவனுக்கு படைப்பது பாரம்பரியமானது. நமது ஒவ்வொரு பண்டிகைகளும் விவசாயிகளுடன் தொடர்புடையவை. தமிழ் பெண்கள் வீடுகளில் போடும் வண்ணக் கோலங்களில் பெரிய மகத்துவம் மறைந்துள்ளது. பல புள்ளிகள் இணைந்து கோலமாவது போல் பல தரப்பினர் இணைந்ததால் நாடு அழகாகிறது. பலதரப்பட்ட மக்களை இணைக்கும் பணியைத் தான் காசி தமிழ்ச்சங்கம் செய்கின்றன. சிறுதானியங்களை கொண்டு ஸ்டார்ட் அப் நிறுவனங்களை இளைஞர்கள் உருவாக்குகின்றனர். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
திருக்குறள் வாசித்தார்
பொங்கல் விழாவில் மோடி பேசும் போது,
"தள்ளா விளையும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு" என்ற திருக்குறளை மேற்கோள்காட்டினார். அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் என தமிழில் பிரதமர் மோடி கூறினார்.
பங்கேற்றவர்கள்; இந்த விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில கவர்னர் தமிழிசை, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன், பா.ஜ., சட்டசபை குழு தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜ தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், தமிழக பா.ஜ., பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மாநில செயலாளர் விஜோஜ் பி செல்வம், உச்சநீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ், ஓய்வு பெற்ற நீதிபதி ராமசுப்பிரமணி, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், பட தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் நடிகை மீனா மற்றும் தொழில் அதிபர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் பொங்கல் விழாவில் பங்கேற்று சிறப்பித்தனர்.
பரிசு; இந்த விழாவில் சிறுமி ஒருவர் இசை நிகழ்ச்சியில் பங்கேற்றார். முடிந்ததும், மோடியின் காலை தொட்டி வணங்கினார். அவரை பாராட்டிய பிரதமர், தான் அணிந்திருந்த சால்வையை பரிசாக சிறுமிக்கு அணிவித்தார்.
பசுக்களுக்கு உணவு அளித்த பிரதமர்; மகர சங்கராந்தியை முன்னிட்டு, பிரதமர் மோடி தனது வீட்டில் பசுக்களுக்கு உணவு அளித்தார். இது குறித்த புகைப்படம் வெளியாகி உள்ளது.