பதிவு செய்த நாள்
16
ஜன
2024
07:01
குழந்தையாக இருந்த போது மட்டுமே நமக்கு தாய் பாலுாட்டுகிறாள். நம் வாழ்நாள் முழுக்க பால் தருவது பசு. எனவே தாய்க்கு இணையாக நாம்
நன்றிக்கடன் செலுத்த வேண்டிய ஜீவன் பசு.
பசுவின் குளம்பு புழுதியை கோதுாளி என்பர். பசுக்கள் கூட்டமாகச் செல்லும் போது கிளம்பும் அந்த புழுதிப்படலம் நம் உடம்பில் பட்டாலே முன்வினை பாவம் தீரும். புனித நதிகளில் நீராடிய புண்ணியம் சேரும்.
ருத்ரம், சமகம் என்னும் மந்திரங்களை ஜபித்து,
பஞ்ச கவ்யம் என்னும்
பால், தயிர், நெய், பசு கோமியம், பசுஞ்சாணம் ஐந்தையும் கலந்து பசுவின் கொம்பு மூலமாக சிவனுக்கு அபிஷேகம் செய்வதைப் பார்த்தால் லட்சுமி கடாட்சம் உண்டாகும். இதனடிப்படையில் தான் கோயில்களில் கோபூஜை தினமும் நடத்தப்படுகிறது. கீரை கொடுத்தா கல்யாணம்ஜாதகத்தில் சுக்கிரன் பலம் இழந்து நீச்சமாக இருந்தால் திருமணத்தடை, குடும்பத்தில் ஒற்றுமையின்மை போன்ற பிரச்னைகள் உண்டாகும். இவர்கள் வெள்ளியன்று பசுக்களுக்கு அகத்திக்கீரை, புல், பழங்கள் கொடுப்பதன் மூலம் நிவர்த்தி பெறலாம். அப்போது கோக்ராஸ ஸ்லோகம் என்னும் பசுவுக்குரிய ஸ்லோகத்தைச் சொல்வது நல்லது. இதன் பொருளைச் சொன்னாலும் புண்ணியமே!.
“ஸௌரபேய்ய: ஸர்வ ஹிதா:
பவித்ரா: புண்யராஸய:!
ப்ரதி க்ருண்ணம் த்விமம் க்ராஸம்
காவஸ் த்ரைலோக்கய மாதா:!
“கவாமங்கேஷு திஷ்டந்தி
புவனானி சதுர்தஸ!
யஸ்மாத் தஸ்மாச் சிவம் மே ஸ்யாத்
இஹலோகே பரத்ர ச!! என சொல்ல வேண்டும்.
பொருள்: “காமதேனு வம்சத்தை சேர்ந்தவளே! எல்லோருக்கும் நன்மை தருபவளே!
பரிசுத்தமானவளே! புண்ணியம் மிக்கவளே! மூவுலகிற்கும் தாயாகத் திகழ்பவளே! இந்த புல்லை உண்டு மகிழ்வாயாக!” உன் மேனி முழுவதும் எல்லா உலகங்களும் பரந்து விரிந்திருக்கின்றன.
இந்த பூலோகத்திலும், பரலோகத்திலும் எனக்கு மங்களத்தை தருவாயாக.
நிறத்துக்கு ஏற்ப குணமிருக்கு
பசுக்களின் நிறத்திற்கு ஏற்ப அதன் குணமும் மாறுபடும். தெய்வீக குணம் மிக்க கரியநிற பசுவின் பால் சிறந்தது. வாதநோய் போக்கும் இந்தப் பசுவை காராம்பசு, கபிலா எனக் குறிப்பிடுவர். கோயில் அபிஷேகத்திற்கும், ஹோமத்திற்கும் இதன் பால் மிகவும் உகந்தது. மஞ்சள் நிறம் கொண்ட பசுவின் பால் பித்தநோய் போக்கும். வெண்ணிறப் பசுவின் பால் நல்ல குணத்தைக் கொடுக்கும். சிவந்த மற்றும் பலவண்ணம் கொண்ட பசுவின் பாலைக் குடிக்க வாயு பிரச்னை தீரும்.
மந்திரப் பாட்டு
பசுவின் சாணத்தில் இருந்து திருநீறு தயாரிக்கும் முறையை சிவபெருமானே உபநிஷதத்தில் எடுத்துச் சொல்லியுள்ளார்.கூன் பாண்டியனின் வெப்புநோயைப் போக்க ஞானசம்பந்தர் திருநீற்றுப்பதிகம் பாடினார். இந்த பதிகத்தை படிப்பவர்களிடம் மந்திரமோ, தந்திரமோ எடுபடாது. ஏனெனில் திருநீறே சிறந்த மந்திரமாகவும், தந்திரமாகவும் விளங்குகிறது என்கிறார் ஞானசம்பந்தர்.
பலமடங்கு நன்மை
காலையில் எழுந்ததும் பசுவை பார்த்தால் நாள் முழுவதும் நல்ல நாளாக அமையும். நல்ல விஷயமாக வெளியில் கிளம்பும் போது கன்றுடன் கூடிய பசுவைக் கண்டால்
வெற்றி கிடைக்கும்.
மாட்டுக் கொட்டில் இருக்கும் வீட்டில் தெய்வ அருள் நிறைந்திருக்கும். கொட்டிலுக்கு கோஷ்டம் என்று பெயர். கோயிலில் மூலஸ்தான சுற்றுச்சுவரை கோஷ்டம் என்பர். கோஷ்டத்தைக் காட்டிலும் பரிசுத்தமான இடம் வேறில்லை. அங்கு மந்திரம் ஜபித்தால் அதன் பலமடங்கு நன்மை கிடைக்கும்.
ஒரு நிமிடம் போதுமே...
நாடு முழுவதும் புனிதமான கோயில்கள், புனித நதிகள், கடல்கள் உள்ளன. இவை அனைத்திலும் நீராட நமக்கு வாய்ப்பு கிடைக்காது. பசுவை வணங்கினால் இந்த பலனை அடையலாம். பசுவின் உடம்பில் முப்பத்து முக்கோடி தேவர்கள் உள்ளனர். புண்ணிய தீர்த்தங்கள், மலைகளும் அடங்கியுள்ளன. பசுவை சுற்றி வந்து வழிபட்டால் புனித தலங்களை சுற்றி வந்த புண்ணியம் கிடைக்கும்.
பெண்களே.... மனசு வையுங்க!
கறவை நின்ற பின்னர் பசுக்களுக்கு உணவு தராமல் புறக்கணித்தால் பெரும் பாவம் உண்டாகும். தினமும் காய்கறி கழிவுகளையாவது பசுக்களுக்கு உணவாக கொடுக்கலாம். வீடுகளில் இதனைச் சேகரிக்கும் பணியில் சமூகசேவை நிறுவனங்கள் ஈடுபட்டால் நல்ல பலன் கிடைக்கும். இதன் மூலம் கோபால கிருஷ்ணனின் அருள் கிடைக்கும் என்கிறார் காஞ்சி மஹாபெரியவர்.
மஹாபெரியவர் பிரார்த்தனை
அந்தணர்களுக்கு பசு தானம் செய்வதால் கொடிய பாவம் கூட நீங்கும் என்கிறது தர்ம சாஸ்திரம். ஆனால் பசுவை தானமாகப் பெறுபவர் அதனைப் பாதுகாப்பாரா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். எங்கு பசுக்கள் பயமின்றி துன்பம் இல்லாமல் நிம்மதியாக மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறதோ அங்கு பாவம் எல்லாம் நீங்கி நாடே ஒளி பெறும் என சியவன மகரிஷி சொல்லியுள்ளார். அந்த உயர்ந்த நிலையை உலகம் அடைய கிருஷ்ணர் அருள் புரிய வேண்டும் என்கிறார் காஞ்சி மஹாபெரியவர்.
மரம் போல மாடும் இருக்கணும்!
பொதுவாக விலங்குகளின் கழிவுகளால் நோய்கள் பரவும். ஆனால் பசுவின் சாணம் மட்டும் கிருமி நாசினியாக விளங்குகிறது. பசுஞ்சாணத்தால் தரையை மெழுகி வாசல் தெளித்தால் வீட்டுக்குள் பூச்சி, நோய்க்கிருமிகள் அண்டாது. வீட்டில் பசு இருந்தால் சுபலட்சுமி தேடி வருவாள். வீட்டுக்கு ஒரு மரம் என்பது போல பசு இருப்பதும் அவசியம்.பாலுக்கு இல்லை விரதம் நல்ல குணத்தோடு வாழ விரும்பும் சாதுக்கள் கூட
பசும்பால் குடிக்கலாம் என்கிறது சாஸ்திரம். ஏனென்றால் அதன் மூலம் உடலும், மனமும் சாத்வீக குணத்தைப் பெறுகின்றன. அதனால் தான் விரதமிருப்பவர்களுக்கும் பால் சிறந்த உணவாக உள்ளது.
பாதத்தை சுவைக்கும் பசு
குழலுாதும் கிருஷ்ணர் சித்திரத்தைப் பார்த்தால் அரிய உண்மை ஒன்று விளங்கும். அவரது கால் பூமியில் செங்குத்தாக ஊன்றியிருக்கும்.
இடது உள்ளங்காலைப் பசு தன் நாவால் சுவைத்தபடி இருக்கும். இதன்மூலம் பாலகிருஷ்ணரின் திருவடியைப் பற்றுவதே பேரானந்தம் என்பதை பசு உணர்த்துகிறது.
கோமதி
அம்பிகையை கோமாதா என குறிப்பிடுகிறது லலிதா சகஸ்ர நாமம். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அம்மனின் பெயரே கோமதி அல்லது ஆவுடை என்றுள்ளது. கோ என்றாலும், ஆ என்றாலும் பசு என பொருள்படும்.