பதிவு செய்த நாள்
18
ஜன
2024
12:01
ஒடிசாவில், 12ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, உலக புகழ் பெற்ற புரி ஜெகன்நாதர் கோவில் வளாகத்தை சுற்றி, 246 அடி துாரத்துக்கு கட்டப்பட்டுள்ள பாரம்பரிய வழித்தடத்தை, அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று திறந்து வைத்தார். ஸ்ரீமந்திர் பரிக்ரமா என்ற இந்த திட்டத்தின் கீழ், 800 கோடி ரூபாய் செலவில் பல்வேறு நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இந்த வழித்தடத்தில், கோவிலை பக்தர்கள் சுற்றி வர நடைபாதை, கழிப்பறைகள், உடை மாற்றும் அறைகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.
ஒடிசாவில், முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில், பிஜு ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள புரி மாவட்டத்தில் கடற்கரையையொட்டி, புரி ஜெகன்நாதர் கோவில் அமைந்துள்ளது. 12ம் நுாற்றாண்டைச் சேர்ந்த இக்கோவிலுக்கு, உள்ளூர், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர். கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, கோவிலை சுற்றி, பல்வேறு நவீன வசதிகளை உருவாக்க முதல்வர் நவீன் பட்நாயக் முடிவு செய்தார்.
நவீன கழிப்பறை: அதன்படி, கடந்த 2021ம் ஆண்டில், ஸ்ரீமந்திர் பரிக்ரமா என்ற திட்டத்தின் கீழ், 800 கோடி ரூபாயில் வளர்ச்சிப் பணிகள் துவங்கின. பணிகள் துரிதமாக முடிவடைந்ததை அடுத்து, கோவிலை சுற்றி, 246 அடி துாரத்துக்கு கட்டப்பட்டுள்ள பாரம்பரிய வழித்தடத்தை, முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஜெகன்நாதர் கோவிலின் பாரம்பரிய வழித்தடத்தில், கோவிலின் எல்லைச் சுவரை உருவாக்கும் வகையில், 24- அடி உயரத்தில் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. சுவாமி ஊர்வலத்துக்கு, 32 அடி அகலத்துக்கு பாதை அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் கோவிலை சுற்றி வர, 26 அடி அகலத்துக்கு பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், நவீன கழிப்பறைகள், குடிநீர், நீரூற்று, ஒரே நேரத்தில் 4,000 குடும்பங்கள் உடை மாற்றும் வகையில் அறைகள் மற்றும் தங்கு மிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நடைபாதையின் பராமரிப்புக்காக, 16 அடி அகலத்துக்கு சேவை பாதை, நடைபாதையைச் சுற்றி வாகனங்கள் செல்ல உதவும் வகையில், 25 அடி அகலத்துக்கு போக்குவரத்து பாதை மற்றும் 23 அடி அகலத்தில் மரங்கள் நிறைந்த நிழல் நடைபாதைகளும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ஜெகன்நாதர் கோவிலுக்கு வரும் வாகனங்கள், போக்குவரத்து நெரிசலில் சிக்குவதை தவிர்க்க, 1.5 கி.மீ., நீளமும், 197 அடி அகலமும் உடைய, ட்ரம்பெட் பாலம் கட்டப்பட்டுஉள்ளது.
இரு வழிகள்: நகரத்தின் நெரிசலில் சிக்காமல் இந்த பாலத்தை பயன்படுத்தி, நேரடியாக பன்னடக்கு வாகன நிறுத்துமிடத்தை அடையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்களை நேற்று துவக்கி வைத்த முதல்வர் நவீன் பட்நாயக், பாரம்பரிய வழித்தடத்தில், 1 கி.மீ., துாரத்துக்கு நடந்து சென்று அங்கு செய்யப்பட்டுள்ள வசதிகளை பார்வையிட்டார். இந்த விழாவை முன்னிட்டு, ஜெகன்நாதர் கோவிலை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. இந்த பாரம்பரிய வழித்தடம், உடனடியாக பக்தர்கள் பயன்பாட்டுக்கு வந்தது. அடுத்த கட்ட வளர்ச்சி திட்டத்தில், 6,000 பக்தர்கள் கொள்ளளவு உடைய வரவேற்பு மையம், ஜெகன்நாதர் கோவிலின் அரிய நுால்கள் அடங்கிய ரகுநந்தன் நுாலகத்தை மீண்டும் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது.
இது குறித்து ஒடிசா தலைமை செயலர் பிரதீப் ஜெனா கூறுகையில், கோவிலை சுற்றி ஆக்கிரமிப்புகள் இருந்ததால், கோவிலை முழுமையாக சுற்றி பார்க்க பக்தர்கள் சிரமப்பட்டனர். தற்போது அந்தப் பிரச்னை சரிசெய்யப்பட்டுள்ளது. தற்போது ஜெகன்நாதர் கோவிலுக்கு வர இரு வழிகள் உள்ளன. இந்த திட்டம், மாநிலத்தின் வளமான கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை தெளிவாக எடுத்துரைக்கிறது, என்றார்.