அத்தி மர வானமுட்டி பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09பிப் 2024 03:02
மயிலாடுதுறை; மயிலாடுதுறை அருகே ஒரே அத்தி மரத்தினால் 14 அடி உயரத்தில் மூலவர் அமைந்துள்ள வானமுட்டி பெருமாள் கோயில் பிரம்மோற்சவ தேர் திருவிழா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே கோழிகுத்தி என்ற கிராமத்தில் 14 அடி உயரத்தில் ஒரே அத்தி மரத்தில் அமைந்துள்ள வானமுட்டி பெருமாள் எனப்படும் சீனிவாச பெருமாள் கோயில் அமைந்துள்ளது. பிப்பல மகரிஷிக்கு பெருமாள் காட்சி தந்த இடமாகும் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சோழர் காலத்து கட்டமைப்புடன் கூடிய இந்த கோயில் பித்ரு தோஷம், சனி தோஷம் நீங்கும் கோயிலாகும். இக்கோயிலில் இந்தாண்டு பிரம்மோற்சவம் கடந்த நான்காம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. பெருமாள் தாயார் உடன் திருத்தேரில் எழுந்தருள திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ரத வீதிகள் வழியே தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.