பதிவு செய்த நாள்
10
பிப்
2024
06:02
அவிட்டம் 3,4 ம் பாதம்: சகோதர, தைரிய, வீரிய காரகனான செவ்வாய், கர்ம காரகனான சனி பகவான் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு எல்லாவிதமான சக்திகளும் நிறைந்திருக்கும். நீங்கள் மேற்கொள்ளும் செயல்களை முடிக்கின்ற வரையில் அதற்குரிய பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். இந்த மாதம் உங்கள் ஜென்ம ராசிக்குள் ராசிநாதன் சஞ்சரிப்பதுடன் சூரியனும் இணைந்துள்ளார். அதன் காரணமாக மனதில் பதட்டமும் செயல்களில் குழப்பமும், நிதானம் இல்லாத தன்மையும் ஏற்படும். இந்த நேரத்தில் முயற்சிகளில் முழுமையான கவனம் தேவை. யோசிக்காமல் எந்தவொரு செயலிலும் ஈடுபட வேண்டாம். இந்த நெருக்கடியான நேரத்தில் குரு பகவான் பார்வை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெரியோரின் ஆசிர்வாதம் கிடைக்கும். தொழிலில் இருந்த தடைகள் விலகி வருமானம் வர ஆரம்பிக்கும். அரசு அலுவலர்கள் பணியாளர்கள் தங்களுடைய வேலைகளில் கவனமாக இருப்பது மிக அவசியம். இல்லையெனில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. பெண்கள் குடும்ப நலனில் கூடுதல் அக்கறை செலுத்தி வருவதுடன் வார்த்தைகளில் கவனம் செலுத்துவது நன்மையாக இருக்கும். உடல் நலனிலும் அக்கறை கொள்ள வேண்டும். மாணவர்கள் கல்வியில் முழுமையான கவனத்தை செலுத்தி வருவது அவசியமாகும்.
சந்திராஷ்டமம்: பிப். 27
அதிர்ஷ்ட நாள்: பிப்.17,18,26. மார்ச் 8,9
பரிகாரம் அபிராமி அந்தாதியை தினமும் படிக்க விருப்பம் நிறைவேறும்.
சதயம்: யோக காரகனான ராகு, கர்ம காரகனான சனி பகவானின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு வாழ்வில் நெளிவு சுளிவுகள் அனைத்தும் தெரிந்திருக்கும். எப்படி எதை அடைவது என்ற வழிகளையும் அறிந்திருப்பீர்கள். இந்த மாதம் உங்கள் நட்சத்திரநாதன் தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வார்த்தைகளின் நிதானம் அவசியம். பொருள் வரவிற்காக மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியாகும். தடைபட்டிருந்த பணம் வந்து சேரும். வெளிநாட்டு முயற்சிகள் ஆதாயத்தை ஏற்படுத்தும். ஜென்ம ராசிக்குள் ராசிநாதன் சஞ்சரிப்பதால் மனதில் வீண் குழப்பம், சங்கடம் தோன்றும். அரசுவழி செயல்கள் இழுபறியாகும். சிலருக்கு சட்ட சிக்கல்கள் தோன்ற வாய்ப்பிருக்கிறது. விரய ஸ்தானத்தில் பூமிகாரகன் செவ்வாய் சஞ்சரிப்பதால் நீண்ட நாளாக விற்பனையாகாமல் இருந்த இடங்கள் இப்போது விற்பனையாக வழி பிறக்கும். சிலர் புதிய சொத்துகளை வாங்குவர். அஷ்டம ஸ்தானத்தில் கேதுபகவான் சஞ்சரிப்பதால் எப்போதும் விழிப்புடன் இருப்பது நல்லது. உங்களுடன் இருப்பவர்களே உங்களுக்கு எதிராக செயல்படும் நிலை தோன்றும். மூன்றாம் இடத்தில் சஞ்சரிக்கும் குரு அத்தகைய நிலையை உருவாக்குவார். நட்புகள் உங்களை விட்டு விலகும் நிலை ஏற்படலாம். இருந்தாலும் சனிபகவானின் பத்தாமிடத்தின் மீதான பார்வையும், குருபகவானின் பார்வைகளும் சாதகமாக இருப்பதால் தொழிலில் தடைகள் விலகும் தொழிலுக்கான முயற்சிகள் வெற்றியாகும். பணம் பலவழிகளில் வர ஆரம்பிக்கும். குடும்பம், தொழிலில் இருந்த சங்கடம் விலகும். பெண்கள் வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்வது நல்லது. மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் இடத்தில் கேது சஞ்சரிப்பதால் கணவரின் உடல் நிலையில் கவனம் செலுத்துவது அவசியம். குடும்பத்தை திட்டமிட்டு நடத்துவதும், வரவு செலவில் கவனமாக இருப்பதும் நன்மை தரும். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவை. ஆசிரியர்களின் ஆலோசனையால் நன்மை உண்டாகும்.
சந்திராஷ்டமம்: பிப்.27
அதிர்ஷ்ட நாள்: பிப்.17,22,26, மார்ச் 4,8,13
பரிகாரம் திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரரை வணங்க வாழ்வு சிறக்கும்.
பூரட்டாதி 1,2,3 ம் பாதம்: தன புத்திர காரகனான குரு, ஆயுள் காரகனான சனிபகவான் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு எப்பொழுதும், செல்வாக்கும் அந்தஸ்தும் இருக்கும். மற்றவர்களுக்கு வழிகாட்டிகளாக இருப்பீர்கள். உங்கள் வார்த்தைகளுக்கு எல்லா இடத்திலும் மதிப்பிருக்கும். இந்த மாதம் உங்கள் நட்சத்திரநாதன் மூன்றாம் இடத்தில் சஞ்சரித்தாலும் அவருடைய பார்வைகள் ஏழு, ஒன்பது, பதினொன்றாம் இடங்களில் பதிவதால் திருமண வயதினருக்கு வரன் வரும். வாழ்க்கைத் துணையின் உடல்நிலையில் இருந்த சங்கடங்கள் விலகும். தந்தைவழியில் ஆதரவு அதிகரிக்கும். எதிர்பார்த்த வரவு வரும். தொழிலில் இருந்த தடைகள் விலகும். ராசிநாதன் ஜென்ம ராசிக்குள் சஞ்சரித்தாலும் அவருடைய மூன்று, பத்தாம் பார்வைகளால் முயற்சிகள் வெற்றியாகும். தொழிலில் இருந்த தடைகள் விலகும். அலுவலகத்தில் உண்டான சங்கடங்கள் நீங்கும். சுயதொழில் செய்பவர்கள் எதிர்பார்த்த ஆதாயத்தை அடைவர். இருந்தாலும் உடல் நிலையில் எப்பொழுதும் கவனமாக இருக்க வேண்டும். இயந்திரம், வாகனங்களை இயக்கும் போதும் விழிப்புணர்வு அவசியம். பெண்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். திருமணத்திற்காக காத்திருந்த சிலருக்கு வரன் தேடி வரும். தெய்வ அருள் கிடைக்கும். நட்புகளால் ஆதாயம் அதிகரிக்கும். பொருளாதார நிலை மேம்படும். மாணவர்கள் இப்போது கல்வியில் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும் மாதத்தின் பிற்பகுதியில் ஆசிரியர்களின் ஆலோசனைகளை ஏற்பது நன்மையளிக்கும்.
சந்திராஷ்டமம்: பிப்.28
அதிர்ஷ்ட நாள்: பிப்.17, 21, 26, மார்ச் 3,8,12
பரிகாரம் மகாலிங்கேஸ்வரரை வணங்கினால் மனக்கவலை தீரும்.