மூங்கிலணை காமாட்சியம்மன் கோயிலில் காப்பு கட்டி விரதம் துவங்கிய பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19பிப் 2024 12:02
தேவதானப்பட்டி; காமாட்சியம்மன் கோயிலில் திருவிழா காலங்களில் கரும்பில் தொட்டிகட்டி நேர்த்திக்கடன் செலுத்தும் ஏராளமான பக்தர்கள் கையில் காப்பு கட்டிக் கொண்டு விரதம் துவங்கினர்.
தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில் மாசி மகாசிவராத்திரி திருவிழா மார்ச் 8ல் துவங்குவதை முன்னிட்டு நேற்று ஏராளமானோர் கையில் காப்பு கட்டிக் கொண்டனர். தேவதானப்பட்டியில் இருந்து 3 கி.மீ., தூரம் மஞ்சளாற்றின் கரையோரம் ஹிந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு அம்மனுக்கு விக்ரஹம் கிடையாது. மூடப்பட்ட கதவிற்கு மூன்று கால பூஜை நடக்கிறது. மார்ச் 8 ல் திருவிழா துவங்குவதை முன்னிட்டு பிப்.16ல் கொடிமரம் நடுவிழா நடந்தது. கோயில் திருவிழா காலங்களில் தீச்சட்டி, பால்குடம், கணவன், மனைவி தம்பதிகள் சகிதமாக தங்களுக்கு குழந்தை வரம் கொடுத்த காமாட்சியம்மனுக்கு கரும்பில் தொட்டில் கட்டி நேர்த்திக்கடன் செலுத்துவர். இவர்கள் 25 நாட்கள் முதல் ஒரு மாதம் வரை விரதம் மேற்கொள்வர். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் கையில் காப்பு கட்டிக்கொண்டனர். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.