சஷ்டி விரதம்; முருகனை மனதார வழிபட்டால் மகிழ்ச்சிக்கு குறை ஏது?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01மார் 2024 07:03
முருகனுக்கு உரிய முக்கிய விரதங்களில் ஒன்று சஷ்டி. சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்பது பழமொழி.சிக்கனத்தின் அவசியத்தை வலியுறுத்த இம்மாதிரி சொல்வது வழக்கம். ஆனால், நிஜத்தில் இது கந்தனை குறிக்கும் பழமொழியாகும். வாரியார் சுவாமிகள் இது பற்றி சொல்லும் போது, சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வளரும் என்பார். கர்ப்பமுறாத பெண்கள் சஷ்டியில் பட்டினி விரதமிருந்தால், அறிவியல் அடிப்படையிலும், முருகனின் கருணையினாலும் அகத்துக்குள் (உடல்) இருக்கும் கர்ப்பப்பையில் கரு தங்கி வளரும் என்பது இதன் பொருள். எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ஆன்றோர் வாக்கு. அந்த ஆறுமுகனுக்கு உரிய விரதங்களுள் மிக முக்கியமானதாகச் சொல்லப்படுவது, கந்தசஷ்டி விரதம். சஷ்டிநாளில் முருகனை வழிபட்டால் நவக்கிரகங்கள் மகிழ்ச்சியுடன் நன்மையளிக்கும். வாழ்வில் எல்லா செல்வங்களும் உண்டாகும். சஷ்டி விரதமிருப்பவருக்கு குழந்தைப்பேறு உண்டாகும். கணவனும், மனைவியும் சேர்ந்து சஷ்டி விரதமிருக்க, நல்ல குணமுள்ள குழந்தைகள் பிறப்பர். இன்று காலை, மாலை கந்தசஷ்டி கவசம் படிப்பது எல்லா நன்மையும் தரும். முருகன் கோயிலுக்குச் சென்று விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும். கார்த்திகை சஷ்டியில் கந்தனை வழிபட துன்பம், கடன் தொல்லை நீங்கும்.