பதிவு செய்த நாள்
05
மார்
2024
06:03
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி மலையில் உரிய அடிப்படை வசதிகளை மேற்கொள்ளாததால், மலையேறும் பக்தர்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
கோவை மேற்கு தொடர்ச்சி மலையில், தென் கைலாயம் எனப்படும் பூண்டி, வெள்ளியங்கிரி மலை உள்ளது. அடிவாரத்தில், அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ், வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. கடந்த மாதம், 12ம் தேதி முதல் பக்தர்கள், வெள்ளியங்கிரி மலையேற வனத்துறையினர் அனுமதித்துள்ளனர். கடந்த ஒரு வாரமாக வெள்ளியங்கிரி மலை ஏறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மார்ச் 8ம் தேதி, மஹா சிவராத்திரி விழா என்பதால், லட்சக்கணக்கான பக்தர்கள் மலையேற உள்ளனர். இந்நிலையில், கோவில் வளாகத்தில் உள்ள கழிப்பறை மற்றும் குளியலறை சுகாதாரமற்ற முறையிலும், துர்நாற்றமும் வீசி வருகிறது. அதோடு, கழிப்பறையில் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளதை சரி செய்யாமல், கழிப்பறையை பூட்டி வைத்துள்ளனர். மலையிறங்கி வந்து அடிவாரத்தில் ஓய்வு எடுக்கும் பக்தர்களின் மொபைல் போன்களும் அதிகளவில் திருடு போயுள்ளது. இதனால், மலையேற வரும் பக்தர்கள் உரிய அடிப்படை வசதிகளின்றி சிரமப்பட்டு வருகின்றனர். கோவிலில் இருந்து மலையேறும் மலைப்படி மண்டபம் அருகிலும், கோவிலை சுற்றிலும் கூடுதலாக குடிநீர் வைக்க வேண்டும். மலையேறும் பக்தர்களுக்காக 24 மணி நேரமும் செயல்படக்கூடிய மருத்துவ குழுவினர் வேண்டும். அவசர காலத்திற்கு பயன்படுத்த வேண்டிய, வனத்துறை, கோவில் நிர்வாகம், போலீசார், மருத்துவத்துறையினரின் மொபைல் எண்களை, பக்தர்களுக்கு தெரியும்படி பல்வேறு இடங்களிலும் வைக்க வேண்டும். அவசர காலத்திற்காக ஆம்புலன்ஸ் கொண்டுவர வேண்டும். தண்ணீர் பந்தல் முதல் பூண்டி அடிவாரம் வரை உள்ள சாலையில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். கழிப்பறை மற்றும் குளியலறையை சுத்தப்படுத்த வேண்டும். கோவில் மற்றும் கோவில் வளாகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் குவியும் பிளாஸ்டிக் மற்றும் இதர குப்பைகளை ஊராட்சி நிர்வாகம் உடனுக்குடன் அகற்ற வேண்டும். கோவிலுக்கு பின்புறம், மலையேறி இறங்கும் பக்தர்கள் ஓய்வு எடுப்பதற்காக தற்காலிக கூரைகள் அமைக்க வேண்டும். அறநிலையத்துறை, வனத்துறை, போலீசார், சுகாதாரத்துறை, இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சி என, அனைத்து துறைகளையும் இணைத்து பக்தர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.