அன்னூர்; குமாரபாளையம், வட்டமலை ஆண்டவர் கோவில் தேரோட்டம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
குமாரபாளையத்தில் 150 ஆண்டுகள் பழமையான வட்டமலை ஆண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் 14ம் ஆண்டு பங்குனி உத்திர தேர்த்திருவிழா கடந்த 19ம் தேதி துவங்கியது. கடந்த 20ம் தேதி கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து தினமும் வட்டமலை ஆண்டவருக்கு சிறப்பு வழிபாடும் உட்பிரகாரத்தில் சுவாமி உலாவும் நடந்தது. நேற்று முன்தினம் மாலை சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று காலை 6 :00 மணிக்கு வள்ளி தெய்வானை சமேதரராக வட்டமலை ஆண்டவர் தேருக்கு எழுந்தருளினார். காலை 10:45 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. வடக்கு வீதி, கிழக்கு வீதி, வழியாக தேர் பவனி வந்தது. அன்னூர் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 3,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேர் செல்லும் வழியில் நீர் மோர், குளிர்பானம் ஆகியவற்றை பலர் வழங்கினர். அன்னதானம் வழங்கப்பட்டது. மோளபாளையம் குழுவின் காவடி ஆட்டம் நடந்தது. முன்னதாக சிறிய தேரில் விநாயகர் பவனி வந்தார், இன்று (25 ம் தேதி) இரவு 7:00 மணிக்கு பரிவேட்டையும், இதையடுத்து, ஸ்ரீ வட்டமலை ஆண்டவர் கலைக்குழுவின் கும்மியாட்டமும், தெப்போற்சவமும் நடக்கிறது.