பதிவு செய்த நாள்
25
மார்
2024
11:03
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவிலில், இந்தாண்டிற்கான பங்குனி உத்திர விழா, கடந்த 21ம் தேதி லட்சார்ச்சனையுடன் துவங்கியது. பங்குனி உத்திரமான நேற்று காலை தீர்த்தவாரி நடந்தது. பின், யாகசாலையில் பூர்ணாஹுதி பூர்த்தியானது. நண்பகல் மூலவருக்கு விபூதி அலங்காரம். இரவு, வடபழனி ஆண்டவர் சிறப்பு அலங்காரத்துடன் சுவாமி விதி உலா நடந்தது. நேற்று அதிகாலை முதல் இரவு வரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், தரிசனம் செய்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால், வேல் காவடி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். பங்குனி உத்திர விழாவை அடுத்து, இன்று முதல் 27ம் தேதி வரை மூன்று நாட்கள் இரவு 7:00 மணிக்கு தெப்பத் திருவிழா சிறப்பு அலங்காரம், வேதபாராயண, நாதஸ்வர கச்சேரியுடன் நடக்கிறது. இன்றைய தெப்பத்தில் வடபழனி ஆண்டவர் புறப்பாடு நடக்கிறது. இரண்டாம் நாள் சண்முகர், வள்ளி, தெய்வானை புறப்பாடும், மூன்றாம் நாள் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானை புறப்பாடு்ம் நடக்கிறது.