பதிவு செய்த நாள்
08
ஏப்
2024
01:04
திருச்சி: திருவானைக்காவல், ஜம்புகேசுவரர் கோவிலில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
பஞ்சபூத தலங்களில் நீர் ஸ்தலமான திருவானைக்காவல், சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. செங்கோட்சோழனால் கட்டப்பட்ட மிகவும் பிரசித்தி பெற்ற திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேசுவரர், அகிலாண்டேஸ்வரி கோவிலில் ஆண்டுதோறும் பங்குனித் தேரோட்டம் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். அதன்படி, பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த மார்ச் 17ம் தேதி துவங்கியது. கடந்த 3ம் தேதி எட்டுத்திக்கு கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையடுத்து தினசரி சுவாமி, அம்பாளுடன் ரிஷப வாகனம், காமதேனு வாகனம், சூரிய, சந்திர பிரபை வாகனம் என பல்வேறு வாகனங்களில் வீதி உலா கண்டருளும் வைபவம் நடைபெற்றது. 6ம் திருநாளான இன்று பங்குனி தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. காலை 6.30 மணியளவில், அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் ஜம்புகேஸ்வரர சுவாமியும், அம்பாளும் எழுந்தருளினர். மற்றொரு தேரில், அகிலாண்டேஸ்வரி தாயார் ஒரு தேரிலும் எழுந்தருளினர். காலை 7.30 மணிக்கு தென்னாடுடைய சிவனே போற்றி, ஓம் நமச்சிவாயா என பக்தி கோஷமிட்டவாறு சிவனடியார்கள் முன் செல்ல திருத்தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். முதலில் சுவாமியும், அம்பாளும் அருள்பாலித்த தேரை பக்தர்கள் வடம் பிடித்தனர். பின்னர், அகிலாண்டேஸ்வரி தாயாரின் தேர் வடம் பிடித்து இழுத்தனர். நான்கு வீதிகளிலும் வலம் வந்து தேர் நிலையை வந்தடைந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்னர்.