பதிவு செய்த நாள்
09
ஏப்
2024
04:04
அவிநாசி; அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு குதிரை ஊர்வலம் நடைபெற்றது. கடும் வெயிலிலும் பக்தி பரவசத்துடன் பக்தர்கள் குதிரை சுமந்து வந்தனர்.
ஆண்டு தோறும் அவிநாசி கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு சின்ன கருணை பாளையம், ராயம்பாளையம் கிராமங்களில் இருந்து மண் குதிரை ஊர்வலம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான, மண் குதிரை ஊர்வலம், கடந்த வெள்ளியன்று சின்ன கருணை பாளையத்தில் இருந்து ஆகாசராயர் கோவிலுக்கு பக்தர்கள் குதிரையை சுமந்து, சென்றனர். தேர் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் கொடியேற்றத்திற்கு முன்பு வரும் செவ்வாய்க்கிழமை அன்று அவிநாசி அடுத்த ராயம்பாளையத்திலிருந்து குதிரையை அலங்கரித்து சுமந்து செல்வார்கள். இந்த ஆண்டுக்கான குதிரை ஊர்வலம் இன்று ராயம்பாளையத்திலிருந்து அப்பகுதி மக்கள், மூன்று குதிரைகளை மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்து சப்பரத்தில் கட்டி அப்பகுதி இளைஞர்கள் தோளில் சுமந்தபடி நடுவச்சேரி ரோடு, மடத்துப்பாளையம் ரோடு, சேவூர் ரோடு சந்திப்பு, கச்சேரி வீதி, வடக்கு ரத வீதி, கிழக்கு ரத வீதி, கோவை மெயின் ரோடு மற்றும் மங்கலம் சாலை வழியாக ஊர்வலமாக சென்று ஆகாசராயர் கோவிலை அடைந்தனர். வழிநெடுகிலும் பொதுமக்கள் பக்தர்களுக்கு தண்ணீர், நீர்மோர், சர்பத் வழங்கி மாலை அணிவித்து வரவேற்றனர். ஆகாசராயர் கோவிலை சென்றடைந்தவுடன் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆகாசராயர் மற்றும் காத்தவராயருக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. கோவில் வளாகத்திற்கு வெளியே உள்ள காத்தவராயருக்கு பக்தர்கள் நேர்த்திக்கடனாக கிடாய் வெட்டி வழிபட்டனர். இதில் ராயம்பாளையம் பகுதியைச் சேர்ந்த குழந்தைகள், பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.