பதிவு செய்த நாள்
13
ஏப்
2024
04:04
விக்கிரமசிங்கபுரம்; பாபநாசம் கோயிலில், சித்திரை விசு திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம், இன்று (13ம் தேதி) விக்கிரமசிங்கபுரத்தில் நடைபெற்றது. பாபநாசம், உலகாம்பிகை சமேத பாபவிநாசர் கோயிலின் சித்திரை விசு திருவிழா, நாளை (14ம் தேதி) நடக்கிறது. விழாவின் 7ம் நாளில் மாலை சுமார் 4 மணிக்கு சுவாமி நடராஜருக்கு, திருவாவடுதுறை ஆதீனம் பாபநாசம் பிச்சைக்கட்டளை சார்பில் சிறப்பு அபிஷேகம், ஆராதனையும், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதல் நடந்தது. இதில், ஆதீன கண்காணிப்பாளர் சொரிமுத்து உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். இரவு சுமார் 7 மணிக்கு சுவாமி நடராஜர் பெரிய சப்பரத்தில் புறப்பாடு, இரவு 9 மணிக்கு சுவாமி, அம்பாள் வீதி உலா நடந்தது. 8ம் திருநாளான நேற்று காலை சுவாமி நடராஜர்வெள்ளை சாத்தி புறப்பாடு, கங்காளநாதர் சிறியசப்பரத்தில் புறப்பாடு, மதியம் 2.30 மணிக்கு சுவாமி நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், மாலை சுமார் 5 மணிக்கு சுவாமி நடராஜர் பச்சை சாத்தி வீதிஉலா நடந்தது. இரவு சுமார் 9 மணிக்கு சுவாமி, அம்பாள் வெட்டுங்குதிரை, காமதேனு வாகனத்தில் வீதி உலா நடந்தது. 9ம் திருநாள் இன்று (13ம் தேதி) காலை 8 மணிக்கு மேல் சுவாமி, அம்பாள் தேருக்கு எழுந்தருள, காலை 8.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.