பரமக்குடி; பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் உய்யவந்தாள் அம்மன் கோயில் பூச்சொரிதல் விழா நடந்தது.
எமனேஸ்வரம் உய்ய வந்தாள் அம்மன் கோயில் 31வது ஆண்டு பொங்கல் விழா, அக்னி சட்டி, பால்குடம் மற்றும் பூச்செரிதல் விழா நடந்தது. இதன்படி ஏப்.,3 மாலை 6:00 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டது. ஏப்.,12 காலை 8:00 மணிக்கு பொங்கல் விழாவையொட்டி பெண்கள் திரளானோர் கோயில் வளாகத்தில் பொங்கலிட்டனர். மாலை 5:00 மணிக்கு வைகை ஆற்றில் இருந்து அக்னி சட்டி புறப்பட்டு பக்தர்கள் கோயிலை அடைந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அன்று இரவு 9:00 மணி முதல் அன்னதானம் நடந்தது. மேலும் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் பூத்தட்டுகளை ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனிடம் சேர்த்தனர். பின்னர் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இன்று காலை 7:00 மணிக்கு பால்குட விழா நடந்து, அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. இன்று காலை கருப்பணசுவாமிக்கு அபிஷேகத்துடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை எமனேஸ்வரம் ஆண்டிபண்டாரத்தார் சமூக நல சங்கத்தினர் செய்திருந்தனர்.