அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஏப் 2024 06:04
அவிநாசி; சித்திரை ஒன்றாம் தேதியான தமிழ் வருடப்பிறப்பில், அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனத்திற்காக 3000ம் மேற்பட்ட பக்தர்கள் திரண்டதால் கூட்டம் அலைமோதியது.
தமிழகத்தின் புகழ்பெற்ற மூன்றாவது பெரிய தேரும், சுந்தரமூர்த்தி நாயனாரால்,பாடல் பெற்ற தலமாகவும்,கொங்கேழு சிவாலயங்களில் முதன்மையானதாக அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இன்று சித்திரை ஒன்றாம் தேதி தமிழர் திருநாளில் திருப்பூர்,ஈரோடு, கோவை மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் அதிக அளவில் சாமி தரிசனத்திற்காக வந்திருந்தனர். மேலும் அவிநாசியை சுற்றியுள்ள கிராமப் பகுதி கோவில்களில், சித்திரை ஒன்றாம் நாளை கொண்டாடும் வகையில் தீர்த்த குடம் எடுப்பதற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் குவிந்தனர். முன்னதாக பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்வதற்கு ஒரு பகுதியில் கட்டண தரிசன சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. அதிகளவில் பக்தர்கள் திரண்டதால் பொது தரிசனத்திற்கு சுமார் 3 மணி நேரம் பக்தர்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கோவில் உள் பிரகாரத்தில் ஆங்காங்கே தீர்த்தம் எடுப்பதற்காக வந்த பக்தர்கள் குழுவை சேர்ந்தவர்கள் அமர்ந்து தீர்த்த குடம் எடுப்பதற்கான ஏற்பாட்டினை செய்து வந்ததால் சாமி தரிசனம் முடிந்து வெளியேற வழி இல்லாமல் பக்தர்கள் தவித்தனர். கோவில் வெளி பிரகாரத்தில் டூ வீலர், கார்கள் நிறுத்தும் இடத்தில் வழக்கம் போல எந்த முன்னேற்பாடுகளும் செய்யாததால் பக்தர்கள் தாங்கள் வந்த வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி வழிபடச் சென்றதால் கடும் வாகன நெருக்கடி ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் கோவிலை விட்டு வெளியேற பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பல பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர்கள் தீர்த்த குடம் மற்றும் மயில் காவடி எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர்.