பட்டமங்கலத்தில் குருப்பெயர்ச்சி சிறப்பு ஹோமம்; பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஏப் 2024 05:04
திருக்கோஷ்டியூர்; திருப்புத்தூர் அருகே பட்டமங்கலம் அஷ்டமாசித்தி தட்சிணாமூர்த்தி கோயிலில் குருப்பெயர்ச்சியை முன்னிட்டு குருப்பெயர்ச்சி ஹோமம் நடந்தது.
இக்கோயிலில் குருபகவான் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளதால் குருத்தலமாக போற்றப்படுகிறது. மே 1ல் மாலை 5:21 மணிக்கு ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அதை முன்னிட்டு இன்று இக்கோயிலில் குருப்பெயர்ச்சி சிறப்பு ஹோமம் நடந்தது. காலை 9:30 மணிக்கு 11 புனித கலசங்கள் சிவாச்சர்யார்களால் யாகசாலை பூஜைகள் துவங்கின. தொடர்ந்து சிறப்பு ஹோமம் நடந்தது. காலை 11:30 மணிக்கு பூர்ணாகுதி தீபாராதனை முடிந்து கலசங்கள் மூலவர் சன்னதிக்கு புறப்பாடு ஆனது. தொடர்ந்து மூலவருக்கு அபிேஷக, ஆராதனைகள் நடந்தது. மூலவர் வெள்ளிக் கவசத்தில் சந்தனக் காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். குருப்பெயர்ச்சி நடைபெறும் மே 1ல் கோயிலில் அனைத்து பக்தர்கள் சாமி தரிசனத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு தரிசனம் ஏதும் இல்லை. காலையில் உற்ஸவர் கர்ப்பக விருஷ வாகனத்தில் எழுந்தருளுகிறார்.மூலவர் சந்தனக்காப்பில் அருள்பாலிப்பார். குருப்பெயர்ச்சியின் போது ராஜகோபுரம், உற்ஸவர்,மூலவர் ஆகியோருக்கு ஏக நேரத்தில் தீபாராதனை நடைபெறும். ஏற்பாட்டினை கோயில் நிர்வாகத்தினர் செய்கின்றனர்.